இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), மத்திய அரசுடன் இணைந்து "UIDAI Data Hackathon 2026 " ஐ அறிவித்துள்ளது. இது இந்தியாவை சேர்ந்த கல்லூரி மாணவர்கள், டெவலப்பர்கள் மற்றும் டேட்டா சயின்ஸ் நிபுணர்களுக்கு ஒரு தனித்துவமான வாய்ப்பாகும். இந்த தேசிய அளவிலான ஆன்லைன் ஹேக்கத்தானில், ஆதார் தொடர்பான நிஜ உலகத் தரவுகளில் பகுப்பாய்வு செய்து, ரூ2 லட்சம் வரை ரொக்கப் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வெல்லலாம்.
இந்த ஹேக்கத்தானில் இந்தியா முழுவதும் உள்ள பொறியியல், தரவு அறிவியல், பகுப்பாய்வு மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட இந்தியப் பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் பதிவு செய்துள்ள, ஜனவரி 1, 2026 நிலவரப்படி 18 வயது பூர்த்தியடைந்த மாணவர்கள் இதில் பங்கேற்கலாம்.

தனிநபராகவோ அல்லது குழுவாகவோ பங்குபெறலாம்; ஒரு குழுவில் தலைவர் உட்பட அதிகபட்சம் 5 உறுப்பினர்கள் வரை இருக்கலாம். பல்வகைப்பட்ட திறன் கொண்ட குழுக்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. திட்டச் சமர்ப்பிப்பின் போது, குழுத் தலைவர் அனைத்து உறுப்பினர்களின் மாணவர் அடையாள அட்டைகளையும் சமர்ப்பிக்க வேண்டும். UIDAI அல்லது NIC சேவை டெலிவரியுடன் தொடர்புடையவர்கள் மற்றும் ஒரு குழுவுக்கு மேல் பங்கேற்பவர்கள் தகுதியற்றவர்கள்.
வெற்றியாளர்களுக்குக் ரொக்கப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் காத்திருக்கின்றன: முதல் பரிசு ரூ2 லட்சம், இரண்டாம் பரிசு ரூ1.5 லட்சம், மூன்றாம் பரிசு ரூ75,000, நான்காம் பரிசு ரூ50,000 மற்றும் ஆறாம் பரிசு ரூ25,000 ஆகும். இது மாணவர்களின் தொழில்நுட்ப ஆர்வத்தை ஊக்குவிக்கும்.
பதிவு செய்ய, அனைத்துப் பங்கேற்பாளர்களும் முதலில் மத்திய அரசின் ஒற்றை உள்நுழைவு தளமான ஜனபரிச்சய் (JanParichay) மூலம் பதிவு செய்ய வேண்டும். பின்னர், https://event.data.gov.in என்ற அதிகாரப்பூர்வ நிகழ்வு போர்ட்டல் வழியாக உள்நுழைந்து விண்ணப்பிக்கலாம். முதல் முறை பயன்படுத்துபவர்கள் ஜனபரிச்சயில் மொபைல் எண் மூலம் பதிவு செய்து, உள்நுழையும் முன் மின்னஞ்சல் ஐடியைப் புதுப்பிக்க வேண்டும்.
அவ்வப்போது யுஐடிஏஐ இது போன்ற போட்டிகளை மாணவர்களுக்கு நடத்துகிறது. அண்மையில் கூட ஆதார் அமைப்புக்கான சுலோகன் மற்றும் லட்சினை வடிவமைப்பு உள்ளிட்ட போட்டிகளை ஆதார் அமைப்பு நடத்தியது. இவ்வகை போட்டிகள் மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களை புதிய கண்டுபிடிப்புகளை நோக்கியும் கிரியேட்டிவாக யோசிக்கவும் தூண்டுகின்றன.


Click it and Unblock the Notifications