உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும் சூழல் நிலவி வருகிறது. வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்கரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோர் வெள்ளை மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அந்தச் சந்திப்புக்குப் பிறகு, உக்ரைன் நாட்டில் அமைதியை நிலைநாட்ட பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய இரண்டு நாடுகள் இணைந்து ஒரு திட்டத்தை உருவாக்கி, அதை அமெரிக்க அதிபர் ட்ரம்ப்-பிடம் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளன. இது பிரிட்டனுக்கு ஒரு முக்கியமான படி என்று அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்திருக்கிறார்.
லண்டனில் மேற்கத்திய நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து உக்ரைன் அமைதி ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்த ஸ்டார்மர் திட்டமிட்டுள்ளார். உக்ரைனுக்கு உதவ ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மீண்டும் உக்ரைன் மீது படையெடுப்பதைத் தடுக்க அமெரிக்காவின் ஆதரவுடன் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஐரோப்பியாவில் உள்ள சில நாடுகள் தீவிரமாக செயல்பட வேண்டும் என்றும், அதற்காகத்தான் பிரிட்டனும் பிரான்சும் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் ஸ்டார்மர் கூறினார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனும், தானும் இணைந்து ஒரு திட்டத்தை உருவாக்கி, அதை அமெரிக்க அதிபரிடம் சமர்ப்பிக்க உள்ளதாகவும் ஸ்டார்மர் பிபிசி தொலைக்காட்சிக்கு தெரிவித்திருக்கிறார்.
ஐரோப்பிய அமைதிப் படையை உக்ரைனுக்கு அனுப்பினால், அதற்கு அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதம் தேவை என்று ஸ்டார்மர் கூறியுள்ளார். உக்ரைன் போர் பல மாதங்களாக நடந்து வருகிறது. இந்த போரால் பல அப்பாவிகளின் உயிர் பலியாகியுள்ளன. எனவே இந்தப் போரை எப்படியாவது முடிவுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்பதற்காக பல சர்வதேச நாடுகளும் தங்களுடைய முயற்சியை மேற்கொண்டு வருகின்றன.
அமெரிக்கா தான் உலக அளவில் ஒரு முக்கியமான நாடாக உள்ளது அமெரிக்காவின் ஆதரவு இல்லாமல் எந்த ஒரு அமைதி முயற்சியும் வெற்றி பெறாது என்ற காரணத்திற்காக பிரிட்டனும் பிரான்சும் அமெரிக்காவிடம் இந்த திட்டத்தை சமர்ப்பித்து உள்ளன. இந்த முயற்சி வெற்றி பெற்றால் உக்ரைன் நாட்டில் அமைதி திரும்பும். ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள நல்லுறவு வலுப்பெறும்.


Click it and Unblock the Notifications