இந்தியாவில் சொகுசு வீடுகள் பிரிவில் இதுவரை காணாத எழுச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக, மிகச் சிறந்த வசதிகளை உள்ளடக்கிய உயர்தர குடியிருப்புகள் அதிக விலைக்கு விற்பனையாவது ஓர் அசாதாரண போக்காக மாறி வருகிறது. மும்பை, குருகிராம், பெங்களூரு போன்ற பெரு நகரங்கள், உயர்மட்ட வாழ்க்கை தரத்தை விரும்பும் பணக்காரர்கள் மற்றும் தொழில்முனைவோரின் புதிய இலக்குகளாக மாறியுள்ளன.
இந்த வர்த்தகப் புள்ளிகள், நகரத்தின் மையப்பகுதியை விட்டு விலகி, அனைத்து ஆடம்பர வசதிகளும் நிறைந்திருக்கும் பிரத்யேகமான குடியிருப்பு வளாகங்களை நாடி செல்வதால், இந்தியாவின் ரியல் எஸ்டேட் சந்தை ஒரு புதிய சகாப்தத்தை நோக்கி நகர்வதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்த வகையில், குருகிராமில் உள்ள டி.எல்.எஃப். கெமிலியாஸ் திட்டத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு ரூ.100 கோடிக்கு விற்பனையாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மும்பையை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று தற்போது ரூ.500 கோடி மதிப்புள்ள இந்தியாவின் மிக அதிக விலை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை அறிவித்து சாதனை படைக்க உள்ளது.
இந்த அல்ட்ரா லக்ஸரி குடியிருப்பு திட்டத்தை சந்தேக் ரியல்டி (Sunteck Realty) நிறுவனம் உருவாக்கவுள்ளது. இந்நிறுவனம் மும்பை மற்றும் துபாய் ஆகிய இரு நகரங்களில் உயர்தர குடியிருப்பு திட்டங்களை தொடங்கவிருப்பதாகவும், இந்த இரண்டு திட்டங்களும் 'Emans' என்ற புதிய உலகளாவிய பிராண்டின் கீழ் கொண்டுவரப்படும் என்றும் அறிவித்துள்ளது.
இந்தக் குடியிருப்புகள் பிரத்யேகமாக அதிக சொத்து மதிப்புள்ள தனிநபர்களை இலக்காக கொண்டுள்ளன. சந்தேக் ரியல்டி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கமல் கைத்தான் இது குறித்துப் பேசுகையில், "நாங்கள் புதிய அடையாளத்துடன் உயர்மட்ட வீட்டு சந்தையில் நுழைகிறோம். 'Emans' என்ற புதிய பிராண்டை உருவாக்கி, அல்ட்ரா லக்ஸரி குடியிருப்பு திட்டப் பிரிவில் உலகளவில் நிலைநிறுத்த உள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
விலை எவ்வளவு..? : மும்பையின் மதிப்புமிக்க நீபன்சீ சாலை (Nepeansea Road) பகுதியில் அமையவுள்ளது. அதேபோல், துபாயில் உள்ள புகழ்பெற்ற பூர்ஜ் கலீஃபாவுக்கு அருகிலுள்ள டவுன்டவுன் துபாயில் அமைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்களும் ஜூன் 2026 ஆம் ஆண்டில் தொடங்கப்பட உள்ளன. இந்த திட்டங்களின் மொத்த வளர்ச்சி செலவு சுமார் ரூ.20,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் குடியிருப்புகளின் விலை ஒரு சதுர அடிக்கு ரூ.2.5 லட்சம் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இது உலகிலேயே மிகவும் அதிக விலை கொண்ட வீடுகளில் ஒன்றாக இருக்கும்.
சந்தேக் ரியல்டி நிறுவனம் ஏற்கனவே 52.5 மில்லியன் சதுர அடியில் 32 திட்டங்களை முடித்துள்ள ஒரு முக்கிய நிறுவனமாகும். நடப்பு ஆண்டில் இந்நிறுவனம் வலுவான வருவாயை பதிவு செய்துள்ளது. முதல் காலாண்டில் அதன் நிகர லாபம் கடந்த ஆண்டை விட 47% அதிகரித்து ரூ.334.3 மில்லியனாக உயர்ந்துள்ளது. இருப்பினும், இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.328 மில்லியனில் இருந்து ரூ.201 மில்லியனாக கணிசமாக குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications