இந்திய சிமென்ட் உற்பத்தி துறையில் கௌதம் அதானி தலைமையிலான அதானி குரூப் அடுத்தடுத்து 3 நிறுவனங்களை வாங்கியது மட்டும் அல்லாமல் புதிதாக 2 நிறுவனங்களை வாங்க முயற்சி செய்து வருகிறது. அதானி குழமம் புதிதாக 2 நிறுவனங்களைக் கைப்பற்றுவது பேச்சுவார்த்தை கட்டத்திலும், ஏல விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் அளவிலேயே உள்ளது.
சிமென்ட் துறையில் நுழைந்தது மூலம் இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் கௌதம் அதானி மிக முக்கியமான இடத்தை அடைந்தது மட்டும் அல்லாமல் சிமென்ட் உற்பத்தியிலும், விற்பனையிலும் முதலிடத்தில் இருக்கும் ஆதித்யா பிர்லா குழுமத்தின் அல்ட்ராடெக் சிமென்ட் நிறுவனத்தின் ஆதிக்கத்தை அசைத்துப் பார்த்தார். இதைச் சுதாரிக்கொண்ட பிர்லா குழுமம் தனது ஆட்டத்தைத் துவங்கியுள்ளது.

ஆதித்யா பிர்லா குழும நிறுவனமான அல்ட்ராடெக் சிமென்ட் லிமிடெட் புதன்கிழமை ஜார்க்கண்டில் உள்ள பர்ன்பூர் சிமென்ட் நிறுவனத்தின் சிமென்ட் அரைக்கும் கட்டமைப்பை சுமார் 169.79 கோடி ரூபாய்க்கு வாங்கியதாகக் கூறியுள்ளது.
ஜார்க்கண்டில் உள்ள பட்ராட்டு-வில் அமைந்துள்ள பர்ன்பூர் சிமென்ட் நிறுவனத்தின் 0.54 MTPA சிமென்ட் அரைக்கும் சொத்துக்களை வாங்கியுள்ளதாக அல்ட்ராடெக் சிமென்ட் பங்குச்சந்தைக்குச் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த முதலீட்டின் மூலம் அல்ட்ராடெக் சிமென்ட் நிறுவனம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நுழைந்துள்ளது, மேலும் இந்தக் கைப்பற்றல் மூலம் அல்ட்ராடெக் சிமென்ட் நிறுவனத்தின் மொத்த சிமென்ட் உற்பத்தித் திறன் இப்போது 133 MTPA ஆக உள்ளது. MTPA என்பது வருடாந்திர மில்லியன் டன் அளவு, அதாவது அல்ட்ராடெக் சிமென்ட் வருடத்திற்கு 133 மில்லியன் டன் சிமென்ட் உற்பத்தித் திறனை கொண்டு உள்ளது.
கடந்த ஆண்டு மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) நஷ்டத்தில் இயங்கும் பர்ன்பூர் சிமென்ட் நிறுவனத்தை விற்பனைக்குக் கொண்டு வந்தது. சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான நிலுவையில் உள்ள கடனை வசூலிக்கச் சொத்து மறுசீரமைப்பு நிறுவனங்களிடமிருந்து (ARCs) ஏலம் விடுத்த நிலையில் தற்போது அல்ட்ராடெக் சிமென்ட் கைப்பற்றியுள்ளது.


Click it and Unblock the Notifications