சென்னை: இந்திய கட்டுமானத் துறையில் இன்று காலையிலேயே பெரும் சலசலப்பு ஏற்படுத்தும் செய்தி வெளியாகியுள்ளது. ஒருபக்கம், நாட்டின் 2வது பெரும் பணக்காரராக இருக்கும் கௌதம் அதானி பெரும் மூட்டை உடன் சிமெண்ட் நிறுவனங்களை வாங்கி வரும் வேளையில், தற்போது குமார் மங்களம் பிர்லா முந்திக்கொண்டார்.
ஆதித்யா பிர்லா குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம், ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியின் உரிமையாளரும், தமிழ்நாட்டின் முன்னணி சிமெண்ட் உற்பத்தியாளருமான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் பெரும் பங்குகளை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை கைப்பற்ற அதானி குழுமம் பல முறை முயற்சி செய்தும் தோல்வி அடைந்த நிலையில், தற்போது நீண்ட கால பேச்சுவார்த்தைக்கு பின்பு இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன பங்குகளை அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் கைப்பற்றுவதற்கு அதன் நிர்வாக குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பங்கு கைப்பற்றல் மூலம் கட்டுமானத்துறையில் பெரும் மாற்றம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் குழு, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 7.06 கோடி பங்குகளை வாங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதல் மூலம் ஒரு பங்கை 267 ரூபாய் விலையில் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் வாங்க உள்ளது. இதன் மூலம் இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு சுமார் 1,885 கோடி ரூபாய் எனத் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த பங்கு கைப்பற்றல் மூலம் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவன இந்தியா சிமெண்ட்ஸ்-ன் கட்டுப்பாடு இல்லாத பங்குகளை மட்டுமே பெற்றுள்ளதாக பங்குச்சந்தை அறிக்கை தாக்கலில் தெரிவித்துள்ளது. அதாவது, இதன் மூலம் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத்தில் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனத்திற்கு எவ்விதமான ஆதிக்கமும் இருக்காது.
இந்த 1,885 கோடி ரூபாய் ஒப்பந்தம் மூலம் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் சுமார் 23% அளவிற்கு பங்குகளை பெற உள்ளது. இந்த பங்கு கைப்பற்றும் பணிகள் ஒரு மாத காலத்திற்குள் முடிவடைவதற்கான வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனத்தின் பங்கு விலையில் 6%க்கும் மேற்பட்ட உயர்வு காணப்பட்டது. அதே சமயம், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை 13.7% உயர்ந்து, கடந்த 52 வாரங்களுக்கான அதிகபட்ச விலையான ரூபாய் 299.00 ஐ எட்டியது.
மார்ச் 2024 நிலவரப்படி, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில், நிறுவனத்தின் ப்ரோமோட்டர் குழு 28.42% பங்குகளையும், முதலீட்டாளரும், டிமார்ட் உரிமையாளருமான ராதாகிஷன் தமனி கூட்டணி 20.78% பங்குகளையும் வைத்திருந்தனர்.


Click it and Unblock the Notifications