2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியை 6.3 சதவீதமாக குறைத்து ஐநா அறிக்கை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் 2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பை குறைத்து இருந்தாலும் உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் ஒரு பொருளாதாரமாக இந்தியா தொடர்ந்து நீடிக்கிறது என சுட்டிக்காட்டி இருக்கிறது.
இந்திய அரசு செலவினங்களை அதிகரித்திருப்பதும் மக்களிடையே நுகரும் போக்கு அதிகரித்து இருப்பதும் இந்திய பொருளாதாரத்தை தொடர்ந்து வளர்ச்சி பாதையிலேயே வைத்திருக்கும் என ஐநாவின் அறிக்கை குறிப்பிடுகிறது. கடந்த ஜனவரியில் ஐநா வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2025ஆம் ஆண்டில் 6.6 சதவீதமாக இருக்கும் என கூறி இருந்தது. தற்போது அதனை 6.3 சதவீதம் என குறைத்துள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கு 6.4 சதவீதமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இருக்கும் என ஐநாவின் அறிக்கை குறிப்பிடுகிறது.

சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார நிலையற்ற தன்மை மற்றும் பல்வேறு நாடுகளுக்கு இடையே நிலவக்கூடிய வர்த்தக மோதல்கள் உள்ளிட்டவை காரணமாக ஐநா இந்தியாவுக்கான தன்னுடைய பொருளாதார வளர்ச்சி தொடர்பான கணிப்பை குறைத்து இருக்கிறது. அப்படி இருந்தாலும் இந்தியா தொடர்ந்து வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக நீடிக்கிறது என்ற ஒரு நம்பிக்கையையும் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் வரிவிதிப்பு நடவடிக்கை காரணமாக இந்தியாவின் ஏற்றுமதியில் சிறிது பாதிப்பு ஏற்படலாம் என்ற ஒரு எச்சரிக்கையும் ஐநா தன்னுடைய அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியாவில் வேலை வாய்ப்பின்மை என்பது சீராக இருப்பதாகவும் , இந்திய வேலைவாய்ப்பு சந்தையில் பாலின பாகுபாடு அதிகமாக இருக்கிறது என்ற ஒரு கவலை தங்களுக்கு இருப்பதாகவும் ஐநாவின் அறிக்கை குறிப்பிடுகிறது.
பணவீக்க அடிப்படையில் பார்க்கும்போது 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் பணவீக்க விகிதம் 4.3 சதவீதமாக குறையும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு 2024 ஆம் ஆண்டு இந்தியாவில் 4.9 சதவீதமாக பணவீக்கம் இருந்தது. சர்வதேச அளவில் பார்க்கும்போது உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி என்பது 2025 ஆம் ஆண்டில் 2.4 சதவீதமாக மட்டுமே இருக்கும் என கூறி இருக்கிறது 2024 ஆம் ஆண்டில் இது 2.9 சதவீதமாக இருந்தது.
பிரேசில், தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் கூட இந்த ஆண்டு சற்றே மந்த நிலை ஏற்படும் என ஐநா தன்னுடைய அறிக்கையில் சுட்டிக்காட்டி இருக்கிறது. வர்த்தக மோதல்கள் முடிவுக்கு வந்து சர்வதேச பொருளாதாரம் சீரடையும் போது உலக பொருளாதாரமும் சீரடையும் என கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications