இந்தியாவில் ஆன்லைன் கற்றல் தளங்களில் முன்னணி நிறுவனமாக அன் அகாடெமி (Unacademy). இதன் தலைமை பொறுப்புகளில் தற்போது பெரிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அன் அகாடெமி நிறுவனர்களான கௌரவ் மஞ்சள் மற்றும் ரோமன் சைனி ஆகியோர் நிறுவன தலைமை பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின் படி இவ்விருவரும் தலைமை பொறுப்புகளில் இருந்து விலகிய பின்னர் சுமித் ஜெயின் அன் அகாடெமி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன் அகாடெமி நிறுவனம் Air learn என்ற பெயரில் ஒரு கற்றல் இணையதளத்தை தொடங்க இருக்கிறது ,மொழி அடிப்படையிலான இந்த கற்றல் இணையதளத்தில் முழு கவனம் செலுத்த இருப்பதாலேயே கௌரவ் மஞ்சளும், ரோமன் சைனியும் அன் அகாடெமியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு கௌரவ் மஞ்சள், ரோமன் சைனி , ஹெமேஷ் சிங் ஆகிய மூன்று நண்பர்கள் இணைந்து தான் அன் அகாடெமி என்ற ஒரு யூடியூப் சேனலை தொடங்கினார்கள். பல்வேறு கல்வி சார்ந்த தகவல்களை இவர்கள் இந்த யூடியூப் சேனல் வழியாக மக்களிடம் சென்று சேர்த்தனர். இதனை அடுத்து அன் அகாடெமி என்பதே ஒரு நிறுவனமாக தொடங்கப்பட்டு edutech தளமாக மாறியது.
கொரோனா காலகட்டத்தில் பலரும் அன் அகாடெமி தளத்தை அதிகமாக பயன்படுத்த தொடங்கினர் இதனால் இந்த நிறுவனம் மிகவும் லாபம் கொண்ட ஒரு நிறுவனமாக செயல்பட்டு வந்தது. ஆனால் கொரோனா பெருந்தொற்று முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பியதை அடுத்து இந்தியாவின் edutech துறையே சற்று சரிவில் இருக்கிறது. அதாவது மக்கள் ஆன்லைன் கற்றல் முறையில் இருந்து மீண்டும் பழைய முறைக்கு மாறி வருகின்றனர்.
பைஜூஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் கூட பெருமளவு நஷ்டம் அடைந்ததை நாம் பார்க்க முடிந்தது. அன் அகாடெமி நிறுவனம் கூட இதுபோன்ற சரிவை சந்தித்ததை அடுத்து தங்களுடைய ஆன்லைன் வகுப்புகளை தாண்டி ஆஃப்லைன் பயிற்சி வகுப்புகளுக்கும் தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதன் காரணமாகவே அன் அகாடெமி நிறுவனத்தின் கட்டமைப்புகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்ட வண்ணம் இருக்கின்றன.
கடந்த ஆண்டுதான் இதன் நிறுவனர்களுள் ஒருவரான ஹெமேஷ் சிங் நிறுவனத்தில் இருந்து தான் விலகுவதாக அறிவித்தார். தற்போது கௌரவ மஞ்சள் மற்றும் ரோமன் சைனி ஆகியோரும் விலகுவதாக தெரிவித்துள்ளனர். அன் அகாடெமியின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்க இருக்கும் சுமி ஜெயினை பொருத்தவரை இதற்கு முன்பாக ரியல் எஸ்டேட் இணையதளமான காமன் ப்ளோர் என்பதை தொடங்கி நடத்தி வந்தார். பின்னர் குயிக்கர் நிறுவனம் இதனை கைப்பற்றியது. இணையதள தொழிலில் சிறந்த பணி அனுபவம் கொண்டவராக இவர் பார்க்கப்படுகிறார்.


Click it and Unblock the Notifications