நியூயார்க் நகரத்திலிருந்து லண்டனுக்கு 60 நிமிடங்களுக்குள் பயணம் செய்யும் வகையிலான புதிய திட்டத்தை எலான் மஸ்க் கையில் எடுத்திருப்பதாக தெரிகிறது.
எலான் மஸ்குக்கு சொந்தமான தி போரிங் கம்பெனி சார்பாக கடலுக்கு அடியில் சுரங்கப்பாதைகளை அமைத்து போக்குவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது . இந்த சுரங்க பாதையானது 3,000 மைல்கள் அதாவது 4800 கிலோமீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

அட்லாண்டிக் கடலுக்கு அடியில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு அதில் அதிவேக ரயில்களை இயக்க வேண்டும் என்பதே எலான் மஸ்கின் கனவாகும். இதன் மூலம் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இடையினான பயண நேரம் வெறும் ஒரு மணி நேரமாக குறைந்து விடும்.
தற்போது அமெரிக்காவிலிருந்து பிரிட்டனுக்கு விமானத்தில் செல்ல வேண்டும் என்றால் 8 மணி நேரம் பயணம் செய்ய வேண்டி இருக்கிறது. இதற்கு முன்பு இது போன்ற சுரங்கப்பாதைகளை அமைப்பதற்கான தொழில் நுட்பங்கள் போதிய அளவில் இல்லாத காரணத்தால் இந்த திட்டத்தை விவாத அளவிலேயே கைவிட்டு விட்டார் எலான் மஸ்க். ஆனால் தற்போது அவருக்கு சொந்தமான போரிங் கம்பெனி சுரங்கப்பாதை அமைப்பதில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வந்துள்ளது. எனவே மீண்டும் இந்த கனவை திட்டத்தை அவர் கையில் எடுத்திருக்கிறார்.
இந்த புதிய தொழில்நுட்பங்கள் மூலம் சுரங்கப்பாதை அமைப்பதற்கான பட்ஜெட்டும் ஆயிரம் மடங்கு குறையும் என எலான் மஸ்க் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஹைப்பர்லூப் என்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தான் இந்த அதிவேக ரயில்களை இயக்க வேண்டும் என எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார். இதன்படி மணிக்கு 3000 மைல்கள் வேகத்தில் ரயில்களை இயக்க முடியும் என சொல்லப்படுகிறது.
இருந்தாலும் அட்லாண்டிக் கடலுக்கு அடியில் 3 ஆயிரம் மைல்களுக்கு சுரங்கப்பாதை அமைப்பது மிகவும் சவாலானது என இந்த துறை சார்ந்தவர்கள் கூறுகின்றனர். முதலில் கடலுக்கு அடியில் சுரங்கப் பாதையை அமைப்பதற்கு புவியியல் ரீதியாக பல சவால்களை சந்திக்க வேண்டும் என கூறுகின்றனர் அது மட்டும் இன்றி ஹைப்பர் லூப் தொழில்நுட்பம் என்பது இதுவரை சோதனை அடிப்படையில் தான் இருக்கிறது தவிர அது வெற்றியடைந்ததாக எந்த ஒரு ஆதாரமும் கிடையாது என்கின்றனர்.
கடலுக்கடியில் சுரங்கப்பாதை அமைத்து அதில் அதிவேக ரயில்களை இயக்கும் இந்த புதிய திட்டத்தால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படும் எனவும் எச்சரிக்கின்றனர்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications