வேலையின்மை புள்ளிவிவரங்கள் வெறுமனே ஒரு நாட்டில் வேலையில்லாத மக்களின் எண்ணிக்கை வெளிப்படுத்துபவை அல்ல. ஒரு நாட்டின் பொருளாதாரம் ஆரோக்கியமாக இருக்கிறதா அல்ல மந்தநிலையில் இருக்கிறதா என்பதை வேலையின்மை புள்ளிவிவரங்கள் தெளிவாக காட்டி விடும். வேலையின்மை விகிதம் அதிகமாக இருந்தால் பொருளாதாரம் மந்தநிலையில் இருப்பதை குறிக்கும் அதேசமயம், வேலையின்மை விகிதம் குறைவாக இருந்தால் பொருளாதாரம் வலுவாக இருக்கிறது என்பதை குறிக்கும்.
நலத் திட்டங்களை செயல்படுத்த, வேலைவாய்ப்பை அதிகரிக்க கொள்கை உருவாக்கம் போன்ற பல விஷயங்களுக்கு ஆதாரமாக வேலையின்மை புள்ளிவிவரங்கள்தான் உள்ளன. இதனால் அனைத்து நாடுகளும் வேலையின்மை குறித்த புள்ளிவிவரங்களை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வெளியிட்டு வருகின்றன. உதாரணமாக அமெரிக்கா போன்ற பொருளாதார பலத்தில் வலிமையான நாடுகள் தங்களது நாட்டின் வேலையின்மை குறித்த புள்ளிவிவரங்களை மாதாந்திர அடிப்படையில் வெளியிட்டு வருகின்றன.

ஆனால் நம் நாடு இதுவரை நகர்ப்புற வேலையின்மை குறித்த தரவை காலாண்டு அடிப்படையில் வழங்கி வந்தது. மேலும் கிராமப்புற மற்றும் நகர்புற வேலையின்மை தரவை ஆண்டுதோறும் இணைந்து வழங்கியது. வளர்ந்த நாடுகளிடம் உள்ள, வேலையின்மை குறித்த அதிக அதிர்வெண் தரவு சேகரிப்பு மற்றும் வெளிப்படுத்துதல் அமைப்பு நம் நாட்டில் இல்லை. இதனால்தான் மத்திய அரசு, நகர்புற வேலையின்மை குறித்த புள்ளிவிவரங்களை காலாண்டு அடிப்படையிலும், கிராமப்புற மற்றும் நகர்புற வேலையின்மை தரவை ஆண்டுதோறும் இணைந்து வழங்கியது.
இந்நிலையில் எதிர்வரும் மே 15ம் தேதி முதல் காலாண்டுக்கு பதிலாக மாதாந்திர அடிப்படையில் வேலையின்மை புள்ளிவிவரங்கள் வெளியிடப்படும் என அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பாக மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், மே 15ம் தேதி வெளியிடப்படும் தரவுகளில், கடந்த ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கான வேலையின்மை புள்ளிவிவரங்கள் அடங்கும்.
அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படும். நாங்கள் இதைச் செய்வது இதுவே முதல் முறை. தரவு சேகரிப்பு புள்ளிவிவர ரீதியாக வலுவானது மற்றும் பிரதிநிதித்துவமானது. அதற்காக உள் நிலைத்தன்மை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அரசாங்கம் தனது வழிகாட்டுதலை பூர்த்தி செய்து ஏப்ரல் மாத இறுதிக்குள் தனியார் மூலதன செலவின டேட்டாவை வெளியிடும். அடுத்த ஆண்டு முதல் சேவைத் துறை நிறுவனங்களின கணக்கெடுப்பின் முடிவுகள் வெளியிடப்படும்.
ஒருங்கிணைக்கப்படாத துறைகளின் வருடாந்திர கணக்கெடுப்பில் பிடிக்கப்பட்ட முறைசாரா துறையின் தரவை காலாண்டு அடிப்படையில் வெளியிடவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. கிராமப்புறங்களில் காலாண்டு அடிப்படையில் தொழிலாளர் மக்கள்தொகையை கணக்கெடுப்பை நடத்தவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
டேட்டா என்பது புதிய எண்ணெய், மேலும் அது நம்பகமானதாகவும் சரியான நேரத்தில் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்திய தரவு உலகளவில் வலுவானது, நம்பகமானது மற்றும் வெளிப்படையானது என்று கருதப்படுகிறது என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications