டெல்லி: இந்தியாவில் கடந்த 2 வருடத்தில் பல முக்கிய காரணிகளும் மாறியுள்ளன. குறிப்பாக வேலை விகிதம், வேலையின்மை விகிதம், விலைவாசி, வறுமை, கொரோனா என பலவும் கவலையளிக்கும் விஷயங்களாக இருந்து வருகின்றன.
இது குறித்து இப்சோஸ் (Ipsos) நடத்திய ஆய்வில் அக்டோபர் 2021ல் நகர்ப்புற இந்தியர்களின் முக்கிய கவலையே வேலையின்மை தான் என தெரிய வந்துள்ளது.
மேலும் வறுமை மற்றும் சமூக சமத்துவமின்மை பற்றிய கவலையும் மக்கள் மத்தியில் அதிகம் இருந்து வருவதாக, இப்சோஸ் ஆய்வறிக்கையானது தெரிவித்துள்ளது.
முந்தைய கவலை
இந்த ஆய்வின் படி, இதற்கு முன்பு உலகளாவிய மக்கள் மத்தியில் கோவிட் - 19 பற்றிய கவலையே பெரியளவில் இருந்தது. குறிப்பாக நகர்புற மக்கள் மத்தியில் அதிகளவில் கொரோனா பற்றிய அச்சமே இருந்தது. கடந்த 18 மாதங்களாக உலக குடிமக்களின் (இந்தியா உள்ளிட்ட 28 சந்தைகளில்) முக்கிய கவலையே கொரோனாவாகத் தான் இருந்தது.
கவலையளிக்கும் வேலையின்மை
ஆனால் தற்போது கொரோனாவை விட, வேலையின்மை என்பது மிக கவலையளிக்கும் ஒரு விஷயமாக மாறியுள்ளது.
இது குறித்தான ஆய்வில் இந்தியாவின் நகர்ப்புற மக்கள் மத்தியில் கவலை தரும் விஷயங்களில் வேலையின்மை குறித்தான கவலை அதிகம் உள்ளதாக 42% பேரும், 35% பேர் கொரோனா வைரஸ் பற்றிய கவலை உள்ளதாகவும், நிதி மற்றும் அரசியல் ஊழல் பற்றிய கவலையை 26% பேரும், குற்றம் மற்றும் வன்முறை குறித்து 24% பேரும், கல்வி குறித்து 20% பேரும் கவலை கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
சர்வதேச குடிமக்களின் கவலை
சர்வதேச குடிமக்களை பொறுத்தவரையில் வறுமை மற்றும் சமூக சமத்துவமின்மை 33% பேரும், வேலையின்மை 30% பேரும், 29% பேர் கொரோனா பற்றிய கவலையையும், நிதி மற்றும் அரசியல் ஊழல் பற்றிய கவலையை 29% பேரும், குற்றம் மற்றும் வன்முறை பற்றிய கவலையை 27% பேரும் கவலை அளிப்பதாக கூறியுள்ளனர்.
தேவை அதிகரிக்க தொடங்கியுள்ளது
மொத்தத்தில் இந்த ஆய்வில் பெரும்பாலான நகர்புற மக்களின் மிகப்பெரிய கவலை என்பது வேலையின்மையாக உள்ளது.
வேலை உருவாக்கம் மற்றும் வேலை வாய்ப்புகள் என்பது வேகமாக இருக்க வேண்டும். ஆனால் தற்போது இதில் தான் பிரச்சனையே உள்ளது. கொரோனாவின் தாக்கம் என்பது தற்போது குறைந்து கொண்டுள்ள நிலையில், வேலை தேடுவதும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆக இதனால் வேலை வாய்ப்பு சந்தையில் தேவை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்தியா சரியான திசையில் செல்கிறது?
எப்படியிருப்பினும் இந்த ஆய்வில் சற்றே நிம்மதி அளிக்க கூடிய விஷயம் இந்தியா சரியான திசையில் செல்கிறது என்று நம்புவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நம்பிக்கை விகிதத்தை பார்க்கும்போது சவுதி அரேபியா 83% உடன் முதல் இடத்திலும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும் உள்ளது.
இதே 64% பேர் தங்களது நாடு தவறான பாதையில் செல்வதாக நம்புகின்றனர். இதில் கொலம்பியா மக்கள் 90% பேரும், பெருவில் 83% பேரும், அர்ஜெண்டினாவில் 82% பேரும் தவறான பாதையில் செல்வதாக தெரிவித்துள்ளனர்.
ஆய்வு எங்கு? எப்போது?
இப்சோஸ் நடத்திய இந்த ஆய்வானது 28 நாடுகளில் நடத்தப்பட்டுள்ளது. இது ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்ட ஒரு ஆய்வாகும். இந்த ஆய்வில் 21,516 பேர் பங்கேற்றுள்ளனர். இந்த ஆய்வானது செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 8 வரையில் நடத்தப்பட்டது.
இந்த ஆய்வு அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இஸ்ரேல் மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளில் 18 - 74 வயதுடைவர்களிடமும், மற்ற எல்லா நாடுகளிலும் 16 - 74 வயதுடையவர்களிடமும் ஆய்வுகள் நடத்தப்பட்டது.
உண்மை தான் இன்றைய காலகட்டத்தில் பலரும் கஷ்டப்படுவது சரியான வேலை என்பது கிடைக்காததால் தான்.. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், உங்கள் கருத்து என்ன பதிவிடுங்கள்.


Click it and Unblock the Notifications