மும்பை: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சனிக்கிழமை ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) அறிமுகப்படுத்திய 24 மணிநேரத்தில் முதல் மாநிலமாக மகாராஷ்டிரா இத்திட்டத்தைத் தனது மாநில அரசு ஊழியர்களுக்கு ஏற்றுக்கொள்ள உள்ளதாக மகாராஷ்டிர மாநில அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தது.
மத்திய அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்தை மாநிலங்களும் ஏற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்த பின்னர், புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று மகாராஷ்டிரா ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்த சில மணி நேரத்தில் மகாராஷ்டிரா அரசின் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. புதிய ஓய்வூதிய திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும்.

விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் 13.5 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் உள்ளனர், அரசு ஊழியர்களைக் கவரும் நோக்கத்தில் புதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா அரசின் இந்த முடிவு அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், விவசாயம் அல்லாத பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு சாரா கல்லூரிகள், விவசாய பல்கலைக்கழகங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி ஊழியர்கள் உள்ளிட்டோருக்கும் இந்த புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் பலன் கிடைக்க உள்ளது.
இந்த புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இது மத்திய அரசு பணியில் இருக்கும் 23 லட்சம் ஊழியர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது ஓய்வு பெற்ற பிறகு அரசு ஊழியர்களுக்கு நிதி பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை வழங்குவதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது.
மேலும் இத்திட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டும் அல்லாமல் மாநில அரசும் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகிறது. மாநில அரசுகள் UPS இல் சேர்க்கப்பட்டால், இத்திட்டத்தால் பயன்படுவோர் எண்ணிக்கை சுமார் 90 லட்சமாக உயரும்.
அரசு ஊழியர்கள் குறைந்தது 25 ஆண்டுகள் தகுதி வாய்ந்த சேவையைச் செய்திருக்க வேண்டும். அவ்வாறு பணி செய்த அரசு ஊழியர்களுக்கு ஓய்வுபெறும் போது அவர்களின் கடைசி 12 மாதங்களில் பெற்ற சராசரி அடிப்படை ஊதியத்தில் 50% உறுதியான ஓய்வூதியம் வழங்கப்படும்.
அரசு ஊழியர்கள் 10 ஆண்டுகள் சேவை செய்திருந்தால், குறைந்தபட்சம் ரூ. 10,000 மாதாந்திர ஓய்வூதியம் இந்த UPS திட்டத்தில் உறுதியளிக்கப்படுகிறது.
ஓய்வூதியதாரர் மறைந்துவிட்டால் அவர்களின் குடும்பத்திற்கு ஓய்வூதிய தொகையில் 60 சதவீதம் தொடர்ந்து வழங்கப்படும் என்பதையும் இந்த புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் (Unified Pension Scheme - UPS) மூலம் அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications