இந்தியாவில் எண்ணற்ற பயணிகளின் போக்குவரத்து செலவைக் குறைத்து, அதே நேரத்தில் வசதியான பயணத்தை உறுதி செய்யும் பணியை இந்திய ரயில்வே செய்து வருகிறது. இந்நிலையில் தனது சூப்பர் அப்ளிகேஷனை பயணிகளின் சேவைகளுக்காக டிசம்பர் இறுதிக்குள் அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே தயாராகி வருகிறது.சென்டர் ஃபார் ரயில்வே இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ் (CRIS) மூலம் உருவாக்கப்பட்ட இந்த மொபைல் ஆப், இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷனுடன் (IRCTC) ஒருங்கிணைக்கப்பட உள்ளது.
IRCTC, டிக்கெட் வாங்கும் பயணிகளுக்கும் CRIS-க்கும் இடையிலான இடைமுகமாக தொடர்ந்து செயல்படும். சூப்பர் ஆப் மற்றும் IRCTC இடையே ஒருங்கிணைப்பு செயல்முறை நடைபெற்று வருகிறது.

இந்த "சூப்பர் ஆப்" பயணிகளுக்கு டிக்கெட்டுகளை முன் பதிவு செய்வது மற்றும் ரயில் நிலையை சரிபார்ப்பது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, ரயில்வே பயணிகள் டிக்கெட் பதிவு செய்வதற்கு IRCTC ரயில் கனெக்ட், உணவு டெலிவரிக்கு IRCTC eCatering, புகார்களுக்கு ரயில் மதத், முன் பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளுக்கு UTS மற்றும் ரயில் ஸ்டேட்டஸை தெரிந்து கொள்ள நேஷனல் ட்ரெயின் என்கொயரி சிஸ்டம் போன்ற பல ஆப்ஸ் மற்றும் வலைத்தளங்களை நம்பியுள்ளனர். புதிய சூப்பர் ஆப் இந்த சேவைகளை ஒரே இடத்தில் இணைக்கும் என்று கூறப்படுகிறது.
10 கோடிக்கும் அதிகமான ஆப் டவுன்லோட்களுடன், IRCTC-யின் ரயில் கனெக்ட் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு மிகவும் பிரபலமான தளமாக உள்ளது. இந்திய ரயில்வே சூப்பர் ஆப்பை அதன் சேவைகள் மற்றும் வருவாயை மேலும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பாக பார்க்கிறது. அதன் அமைப்புகளை மேம்படுத்தி சூப்பர் ஆப் உடன் இணைப்பதன் மூலம், IRCTC பயணிகளுக்கு இன்னும் சிறந்த அனுபவத்தை வழங்க உள்ளது.
ரயில் பயணிகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஒரு அப்ளிகேஷனும், பிற சேவைகளைப் பெறுவதற்கு ஒரு அப்ளிகேஷன் என பல்வேறு ஆப்களைப் பயன்படுத்துவது சற்று சிக்கலாக இருந்து வந்தது. இதனால் நீண்ட தூரம் பயணம் செய்யும் பயணிகள் ஒவ்வொரு சேவைக்கும் ஒவ்வொரு அப்ளிகேஷனைப் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனை தவிர்க்கும் பொருட்டு தற்போது சூப்பர் அப்ளிகேஷனை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.
இதனால் இனி வரும் நாட்களில் உணவு ஆர்டர் செய்வது, டிக்கெட் முன்பதிவு செய்வது ட்ரெயின் ஸ்டேட்டஸ் சரி பார்ப்பது என அனைத்தையும் ஒரே அப்ளிகேஷனில் பயணிகள் பெற முடியும். இது பயணிகளுக்கு மட்டும் இன்றி இந்திய ரயில்வேக்கும் நன்மை பயக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications