விலைவாசி உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பால், ஓய்வூதியம் பெறுபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சவால்களை சமாளிக்கவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், 2024-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் நிதி உதவி மற்றும் வரிச் சலுகைகள் குறித்த அறிவிப்புகளை முதியோர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். முதியோர் பராமரிப்பு செலவுகள் அதிகரித்து வரும் சூழலில், பட்ஜெட்டில் என்னென்ன சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்பது குறித்து விவரிக்கிறது இந்தப் பதிவு.
வாழ்க்கைச் செலவுகள் குடும்பங்களை மட்டுமின்றி மூத்த குடிமக்களையும் வெகுவாக பாதித்துள்ளது. ஓய்வூதியம் பெறுபவர்களும் இதில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஓய்வூதியம் பெறுபவர்களுக்காக, இந்த பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாகுமா? என்று மூத்த குடிமக்கள் எதிர்பார்க்கின்றனர். வருகின்ற ஜூலை 23-ஆம் தேதி அன்று பட்ஜெட் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட உள்ளது.

80TTB பிரிவின் கீழ் வரி உச்சவரம்பு உயர்வு: பேங்க் டெபாசிட்கள், போஸ்ட் ஆபீஸ் டெபாசிட்கள் போன்றவற்றின் மீதான வட்டி வருமானத்திற்கு ரூ.50,000 வரை வரி கழித்துக் கொள்ள முதியோர்கள் தற்போது அனுமதிக்கப்படுகின்றனர். இதை ரூ.1 லட்சமாக உயர்த்துவதோடு புதிய வரி முறையிலும் கழித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
வாடகை செலவுக்கான வரி கழித்தல்: ஓய்வூதியம் பெறாத, வாடகை வீட்டில் வசிக்கும் முதியோர்களுக்கு வாடகை செலவுக்கான வரி கழித்தல் அறிவிக்கப்படலாம். இதன் மூலம் அவர்களின் வீட்டு வாடகைச் செலவு குறைந்து நிதிச்சுமை குறையும்.
ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் வரி விலக்குகளில் அதிகரிப்பு: மூத்த குடிமக்களுக்கான உடல்நலக் காப்பீட்டு பிரீமியத்தில் உள்ள விலக்குகளை அரசாங்கம் உயர்த்தலாம் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன. தற்போதைய வரம்பு ரூ.50,000-ஆக உள்ளது.
இந்த வரம்பு ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்படலாம். அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகளை நிவர்த்தி செய்வதற்கும், அவர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வைப் பேணுவதற்கும் இந்த வரம்பை உயர்த்துவது நிச்சயம் உதவிகரமானதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் நிலவுகிறது.
LTCG வரி விலக்கு உச்சவரம்பு உயர்வு: நீண்டகால மூதலீடுகளில் இருந்து கிடைக்கும் லாபத்திற்கான வரி விலக்கு உச்சவரம்பை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்துவதன் மூலம், முதியோர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது ஊக்குவிக்கப்படும்.
இது தவிர, மூத்த குடிமக்கள் பழைய மற்றும் புதிய வரி முறைகள் மற்றும் NPS, EPS மற்றும் பிற திட்டங்களின் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கும் வரி விலக்கு வரம்புகளை உயர்த்த எதிர்பார்க்கின்றனர்.
கூடுதலாக, மூத்த குடிமக்களின் வரி தாக்கல் சுமையைக் குறைப்பதற்காக, தற்போது 75 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் வரி விலக்கு வரம்பை உயர்த்த வேண்டும். அதாவது வருமான வரி சட்டம் 194P-இன் கீழ் 75 வயதுடைய நபர் வருமானவரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு பெறலாம். இந்த வரம்பை குறைக்கவும் எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.
மேற்கூறிய திட்டங்கள் குறித்த அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் வெளியாகுமா மூத்த குடிமக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுமா? என்பதை தெரிந்து கொள்ள இன்னும் ஒரே ஒரு நாள்தான் இருக்கிறது. பார்ப்போம் இந்த பட்ஜெட் மூத்த குடிமக்களுக்கு சாதகமாக இருக்குமா என்று!


Click it and Unblock the Notifications