2025-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகின்ற பிப்ரவரி 1-ஆம் தேதி அன்று தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் அறிவிப்புகளை எதிர்நோக்கி பல்வேறு துறை சார்ந்தவர்களும் தங்களின் கோரிக்கைகளை தெரிவித்து வருகின்றனர். வெவ்வேறு துறைகளுக்கும் வெவ்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. அந்த வகையில் இந்த முறை பட்ஜெட்டில் தனியார் ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.7,500-ஆக மாற்ற வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டுள்ளது.
எனவே பென்ஷன் குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் நிஜமானால், ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக இருக்கும். ஏனெனில் தற்போது மிகக் குறைந்த ஓய்வூதிய மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

ஓய்வூதியத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கை என்ன?: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் வருங்கால வைப்பு நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் முதலாளி மற்றும் பணிபுரியும் ஊழியர் இருவரும் சேர்ந்து மாதம் மாதம் தங்கள் பங்களிப்புகளைச் செய்ய வேண்டும். அப்படி பங்களிப்பதில் ஒரு பகுதி அதாவது 8.33 சதவீதம் EPS திட்டத்திலும், 3,67 சதவிதம் EPF திட்டத்திலும் டெபாசிட் செய்யப்படும்.
இதில் EPS திட்டத்தில் டெபாசிட் செய்யப்படும் தொகை குறிப்பிட்ட தகுதியை பூர்த்தி செய்த பிறகு ஊழியர்களுக்கு பென்ஷனாக வழங்கப்படும். அதாவது 10 ஆண்டுகளை நிறைவு செய்தல், ஊழியர் 58 வயதை எட்டுதல் போன்ற சில தகுதியை அளவுகோல்களை பூர்த்தி செய்தால் பென்ஷன் வழங்கப்படும்.
தற்போது EPS என்று சொல்லப்படுகிற தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச பென்ஷனாக 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 10 ஆண்டுகளுக்கு முன்பு, 2014-ஆம் ஆண்டில் 1,000-ஆக நிர்ணயிக்கப்பட்டது.
அதற்கும் முன் 1,000 ரூபாயை விட குறைவான ஓய்வூதிய தொகை இருந்ததால் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மாற்றம் ஊழியர்களுக்கு சிறிது நிவாரணம் வழங்கியது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல பணவீக்கம் அதிகரித்திருக்கிறது. அதன் அடிப்படையில் இந்தத் தொகையை ரூ.7500-ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதற்காக சிலர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியுள்ளனர்.
ஒருவேளை இந்த ஓய்வூதியத்தை அதிகரித்தால் ஓய்வு பெற்ற பிறகு தங்கள் வாழ்க்கையை யாரையும் சார்ந்திருக்காமல் வசதியாக மாற்ற முடியும் என்பதனால் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் பணவீக்கம் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. 1,000 ரூபாய் பென்ஷன் இனி அவ்வளவு உதவியாக இருக்காது. எனவே ஓய்வு பெற்ற பிறகு அடிப்படை தேவைகளையாவது பூர்த்தி செய்வதற்கு குறைந்தபட்சம் ரூ.7500 என்ற ஓய்வூதியம் போதுமானதாக இருக்கும் என்று ஊழியர்கள் கருதுகின்றனர்.
பல ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு உடல் நல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். ரூ.7,500 ஓய்வூதியம் வழங்கப்பட்டால் தங்கள் சுகாதாரச் செலவுகளையும் பார்த்துக் கொள்ள முடியும். அதோடு வயதாக வயதாக வேலை செய்யும் திறன் குறைய தொடங்கும். குறிப்பாக வயது முதுமையில் இருப்பவர்களுக்கு அரசாங்கம் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஊழியர்கள் கருதுகின்றனர். மத்திய அரசு இந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்டால் 2025-ஆம் ஆண்டு தனியார் ஊழியர்களுக்கு இது ஒரு முக்கியமான ஆண்டாக அமையும்.


Click it and Unblock the Notifications