இந்தியாவை சேர்ந்த கோடிக்கணக்கான மிடில் கிளாஸ் மக்களுக்கு ஒரு அவசர பண தேவை என்றால் உடனடியாக கை கொடுப்பது தங்கள் தங்க நகை கடன்கள் தான். வங்கிகள் அல்லது வங்கி சாராத நிதி நிறுவனங்களுக்கு சென்று நம் கையில் இருக்கக்கூடிய தங்க நகையை அடகு வைத்து அரை மணி நேரத்தில் பணமாக மாற்றிக் கொள்ளலாம்.
வேறு எந்த ஒரு சொத்தையும் இத்தனை எளிதாக நம்மால் பணமாக மாற்ற முடியாது. அதேவேளையில் பெர்சனல் லோன் போன்ற கடன்களோடு ஒப்பிடுகையில் குறைந்த வட்டியில் தங்க நகை கடன்கள் கிடைக்கின்றன. அந்த வகையில் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரக்கூடிய ஒரு சந்தையாக தங்க நகை கடன் சந்தை இருக்கிறது. பொதுத்துறை வங்கிகள் மட்டுமில்லாமல் தனியார் நிறுவனங்கள் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்களும், தங்க நகை கடன்களை வழங்குவதற்கு என்றே செயல்படக்கூடிய நிறுவனங்களும் இந்தியாவில் இருக்கின்றன.

பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் தங்க நகை கடன்கள் தொடர்பான சில முக்கியமான மாற்றங்கள் வரக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தங்க நகை கடன் வழங்கக்கூடிய நிதி நிறுவனங்கள் மத்திய அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்திருக்கின்றன. இந்த கோரிக்கைகளை ஏற்று அதற்கேற்ற வகையிலான அறிவிப்புகள் வெளியானால் குறைந்த வட்டியில் நமக்கு தங்க நகை கடன்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டாகும்.
முத்தூட் பைனான்ஸ், மணப்புரம் பைனான்ஸ் போன்ற வங்கி சாராத நிதி நிறுவனங்கள் தங்களைப் போன்ற அமைப்புகளுக்கு வங்கிகளுக்கு கிடைக்கக்கூடிய அனைத்து வகையான சலுகைகளையும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கின்றன. அதாவது இந்தியாவை சேர்ந்த பெரும்பாலான தங்க நகை கடன் வாங்கக்கூடிய வாடிக்கையாளர்கள் குறைந்த வருமானம் கொண்ட பிரிவை சேர்ந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். பெரும்பாலும் 50 ஆயிரம் ரூபாய்க்கு கீழ்தான் இந்த கடன் தொகை இருக்கிறது.
மருத்துவ செலவு, கல்வி தேவை, மூலதன செலவு, விவசாயம், சிறு தொழில் தொடங்குவது போன்றவற்றிற்காக தான் இந்த தங்க நகை கடன்களை வழங்கப்படுகின்றன. வங்கிகளுக்கு priority sector lending விதிமுறைகளின் படி பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன. இதனால் வங்கிகளுக்கு எளிமையாக நிதி என்பது கிடைத்து விடுகிறது. ஆனால் தங்க நகை கடன் வழங்கக்கூடிய வங்கி சாராத நிதி நிறுவனங்களுக்கு இந்த சலுகைகள் கிடைப்பதில்லை.
இதன் காரணமாக வங்கி சாராத நிதி நிறுவனங்கள் அதிகபட்ச வட்டியில் பணத்தை திரட்டி வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குகின்றன. எனவே தங்க நகை கடன்களுக்கு அதிக வட்டியை விதிக்கின்றன. ஒருவேளை வங்கிகளை போன்று வங்கி சாராத நிதி நிறுவனங்களுக்கும் priority sector lending விதிமுறைகளின் கீழ் சலுகைகள் கிடைத்தால் நிதி நிறுவனங்கள் தங்க நகை கடன்கள் மீது விதிக்கும் வட்டி விகிதங்கள் குறையும். இது குறைந்த வருமானம் கொண்ட பிரிவை சேர்ந்த மக்களுக்கும் மிகப்பெரிய நன்மையை ஏற்படுத்தித் தரும்.
எனவே மத்திய அரசு பட்ஜெட்டில் தங்க நகை கடன்கள் வழங்கும் நிதி நிறுவனங்களுக்கு சாதகமான அறிவிப்பை வெளியிடுமா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. அவை எதிர்பார்ப்பதை போல சலுகைகள் கிடைத்தால் அது நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு பலன் தருவதாக அமையும்.


Click it and Unblock the Notifications