மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமம் பிப்ரவரி 1ம் தேதி எதிர்வரும் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். மத்திய பட்ஜெட் தயாரிப்பு பணிகள் எப்படி, எப்போது தொடங்கும் என்று பலரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பொதுவாக மத்திய பட்ஜெட் தயாரிப்பு பணிகள், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு சுமார் 6 மாதங்களுக்கு முன்பே தொடங்கி விடும். பெரும்பாலும் செப்டம்பர் மாதத்தில் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தொடங்கும். முதலில் மத்திய நிதியமைச்சகம், மற்ற அனைத்து அமைச்சகம் மற்றும் துறைகளுக்கும் ஒரு பட்ஜெட் சுற்றறிக்கை வெளியிடும். நடப்பு நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளையும் அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் மதிப்பீடுகளையும் உருவாக்குவதற்கான வழிகாட்டுதலை வழங்கும் நோக்கத்துக்காக இந்த சுற்றறிக்கையை நிதியமைச்சகம் அனுப்பும்.
இதனையடுத்து அமைச்சகங்களும், துறைகளும் தங்களது செலுத்த வேண்டிய மத்திய வரிகள் மற்றும் கடமைகள் உள்ளிட்ட வருவாய் மற்றும் செலவின விவரங்களை நிதி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கும். அதனை தொடர்ந்து ஒவ்வொரு அமைச்சகம் மற்றும் துறையின் நிகர பட்ஜெட் உச்சவரம்புகளை முடிவு செய்ய, செயலாளர் (செலவு) தலைமையில் உயர் அரசு அதிகாரிகள் அடங்கிய குழு பட்ஜெட்டுக்கு முந்தைய விவாதங்களை நடத்துவார்கள். இந்த கூட்டம் வழக்கமாக அக்டோபர் மாதத்தின் நடுப்பகுதியில் தொடங்கும்.

இதன் தொடர்ச்சியாக, நிதியமைச்சகம் ஒவ்வொரு துறைகளுக்கும் அவர்கள் எதிர்வரும் செலவினங்களுக்காக தற்காலிக வருவாய் உச்சவரம்பை ஒதுக்கும். இதில் எந்த துறைக்கும் ஆட்சேபனை இருந்தால், பிரதமர் அல்லது மத்திய அமைச்சரவையுடன் கலந்தாலோசித்து நிதி அமைச்சகத்தால் தீர்வு காணப்படும்.
முடிவுகள் இறுதி செய்யப்பட்ட பிறகு, நிதியமைச்சகம் மற்றும் மத்திய அரசின் பல்வேறுகளின் உள்ளீடுகளை கொண்டு நிதியமைச்சரின் பட்ஜெட் உரை தயாரிக்கப்படும். பட்ஜெட் ஆவணங்கள் நிதியமைச்சகத்தின் சொந்த அச்சகத்தில் அச்சிடப்படுகிறது. இதனால் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு சில மாதங்களுக்கு முன்பே பட்ஜெட் அச்சகத்திற்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்படும்.
பட்ஜெட் தயாரிப்பு பணிகள் நிறைவை குறிக்கும் வகையில், நிதியமைச்சர் வழக்கமாய் பெரிய பாத்திரத்தில் அல்வாவை கிளறி அனைவருக்கும் பகிர்ந்து அளிப்பார். அதன் பின் லாக்-இன் காலம் அறிவிக்கப்பட்டு பட்ஜெட் அறிக்கை அச்சிடப்படும். இந்த லாக்-இன் காலத்தில் பட்ஜெட் தயாரிப்பில் பணியாற்றிய அனைத்து ஊழியர்களும் அமைச்சக வளாகத்திற்குள் மட்டுமே இருக்க வேண்டும்.
பட்ஜெட் ஆவணங்களும், தரவுகளும் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அமைச்சக வளாகத்துக்குள் இருக்கும்போது அவர்கள் யாரும் வெளி உலகத்துடன் எந்தவொரு தொடர்பும் இருக்கக்கூடாது.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு, குடியரசு தலைவரின் பரிந்துரையும் பெறப்படுகிறது. பிப்ரவரி 1ம் தேதியன்று குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்றவுடன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பின்னர் கூறப்பட்ட நிதி முன்மொழிவுகளை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான மசோதா கொண்டு வரப்படும்.
Story Written by: Subramanian


Click it and Unblock the Notifications