டெல்லி: இந்தியாவில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்துவதற்கான திட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இயற்கை வேளாண்மை இயக்கம்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நவம்பர் 25ஆம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டன. இதில் முக்கியமானது இயற்கை வேளாண்மைக்கான தேசிய இயக்கம். மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்திற்காக 2481 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 1 கோடி விவசாயிகள் இயற்கை வேளாண்மை செய்ய இந்த திட்டம் உதவும்.

பான் 2.0: அரசு நிறுவனங்களின் அனைத்து டிஜிட்டல் அமைப்புகளுக்கும் நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் எண்ணை பொது வணிக அடையாள காட்டியாக மாற்ற வசதியாக பான் 2.0 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக 1435 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே சந்தா: நாடு முழுவதும் அறிவார்ந்த ஆய்வு கட்டுரைகள் மற்றும் பத்திரிக்கை வெளியீடுகளுக்கான அணுகலை வழங்குவதற்காக ஒரே நாடு ஒரே சந்தா என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2025, 2026 மற்றும் 2027 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கும் இந்த திட்டத்திற்கு 6000 கோடி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 6300-க்கும் மேற்பட்ட அரசு உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களை சேர்ந்த ஆய்வாளர்களும் மாணவர்களும் சர்வதேச மற்றும் உள்நாட்டு ஆய்வு கட்டுரைகளை எளிதாக அணுக முடியும்.
அடல் கண்டுபிடிப்பு இயக்கம்: நிதி ஆயோக் அமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்ட அடல் கண்டுபிடிப்பு இயக்கம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2028 மார்ச் 31 வரை செயல்பாட்டில் இருக்கும் என்றும் இதற்காக 2750 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று ரயில் திட்டங்கள்: 7,927 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 ரயில் திட்டங்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. மகாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள 7 மாவட்டங்களுக்கு பயன் தரும் வகையில் இந்த மூன்று ரயில் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.
நீர் மின் திட்டங்கள்: அருணாச்சல பிரதேசத்தில் 3,689 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு நீர் மின் திட்டங்களுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications