ஒருநாள் இரவு நன்றாக தூங்கிவிட்டு கண் விழித்துப் பார்க்கிறீர்கள்.. திடீரென உங்களுடைய அக்கவுண்டில் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு பணம் வந்துள்ளதாக மெசேஜ் வருகிறது. இப்போது உங்களுடைய மனநிலை என்னவாக இருக்கும்? கற்பனையாக நினைத்துப் பார்ப்பதற்கே கலகலப்பாக இருக்கும் போது, உண்மையிலேயே உத்தரபிரதேசத்தை சேர்ந்த நபருக்கு இது நடந்துள்ளது.
ஆம்.. உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் என்ற பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு இந்த திடீர் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. தன்னுடைய வங்கிக் கணக்கில் நம்ப முடியாத அளவுக்கு பணம் வந்திருப்பதை பார்த்து அந்த விவசாயி அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்.

ஏப்ரல் 25-ஆம் தேதி அன்று அஜித்குமார் சிங் என்ற விவசாயி தனது மொபைல் மூலம் பேலன்ஸ் விவரங்களை சரிபார்த்துள்ளார். அப்போது அவருடைய வங்கிக் கணக்கில் 36 இலக்கத் தொகை காண்பிக்கப்பட்டுள்ளது. அதாவது பேலன்ஸை சரிபார்த்த போது ரூ.1,00,13,56,00,00,01,39,54,21,00,23,56,00,00,01,39,542 மிச்சமிருப்பதாக காண்பிக்கப்பட்டுள்ளது.
இதைப் பார்த்த அஜித்குமாருக்கு ஒன்றுமே புரியவில்லை. நிதி ஆய்வாளர்களால் கூட புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மிகப்பெரிய தொகையாக இருந்துள்ளது. உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருக்கும் எலான் மஸ்கின் சொத்து மதிப்பை விட இந்தத் தொகை சுமார் 10 மடங்கு அதிகமாகும். ஏனெனில் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 14 இலக்கங்களை கொண்ட தொகையாகும்.
ஏப்ரல் 24-ஆம் தேதியன்று தான் இந்த சம்பவம் குறித்து அஜித்குமாருக்கு தெரியவந்துள்ளது. ஏனெனில் அன்றைய தினம் தனது வங்கி கணக்கில் 1800 ரூபாய் அங்கீகரிக்கப்படாத முறையில் எடுக்கப்பட்டதை அஜித் குமார் கவனித்துள்ளார். அப்போதே அவருக்கு சந்தேகம் தலைக்கேறத் தொடங்கியுள்ளது. இது சைபர் மோசடியாக இருக்கலாம் என்று தெரிந்து கொண்டு உடனடியாக வங்கிக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் அன்றைய தினமே மீண்டும் 1400 ரூபாய் அவருடைய வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் நடந்த மறுநாள் தான் அவருடைய அக்கவுண்டில் இவ்வளவு பெரிய தொகை வரவு வைக்கப்பட்டதாக காண்பிக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகையை அஜித்குமாரால் படிக்கக் கூட முடியவில்லை. உடனடியாக அவருடைய கைகள் நடுங்கத் தொடங்கியுள்ளது. அதன் பிறகு சில நிமிடங்களிலேயே அஜித்குமாரின் வங்கி கணக்கில் இருக்கும் பேலன்ஸ் குறித்த செய்தி அவர் வசிக்கும் கிராமம் முழுவதும் காட்டு தீ போல பரவியது.
இதனால் அஜித் குமாரின் நண்பர்கள், அண்டை வீட்டார் என அனைவரும் இந்த வினோதமான பேலன்ஸைக் காண நேரில் அவருடைய வீட்டிற்கு படையெடுத்துள்ளனர். அந்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியது. வந்த அனைவரும் அஜித் குமாரை இந்தியாவின் "பணக்கார விவசாயி" மற்றும் "கோடீஸ்வர விவசாயி" என்று அழைக்கத் தொடங்கினர். ஆரம்பத்தில் அஜித் குமார் மற்றும் அவருடைய மனைவி குழந்தைகள் என அனைவரும் மகிழ்ச்சி அடையத் தொடங்கியுள்ளனர். தங்களுடைய மண் குடிசை வீட்டை மாற்றியமைத்து விடலாம், குத்தகைக்கு எடுக்கப்பட்ட விவசாய நிலங்களை கொடுத்துவிட்டு சொந்தமாக நிலம் வாங்கிவிடலாம் என தங்களுடைய வாழ்க்கையை மாற்றி அமைக்கும் விதமாக கனவு காண தொடங்கியுள்ளனர்.
கடவுளுக்கு தங்களுடைய வேண்டுதல் கேட்டு விட்டது என்று நினைத்த அஜித்குமாரின் குடும்பத்திற்கு ஒரு கணம் கூட அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. ஏனெனில் இவ்வளவு பெரிய தொகை வரவு வைக்கப்பட்டதனால், தங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ? என்று எண்ணி பயப்படத் தொடங்கியுள்ளனர்.
இதனால் அஜித் குமார் முதலில் வங்கிக்கு தெரிவித்தார். வங்கிக்கு தெரிவிக்கப்பட்டவுடன் ஏர்டெல் பேமென்ட்ஸ் பேங்க் உள்விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆரம்பகட்ட விசாரணையில் இது ஒரு தொழில்நுட்பக் கோளாறாக இருக்கலாம் என்றும், ஜம்மு காஷ்மீரில் நிர்வகிக்கப்படும் வங்கி அமைப்பின் மூலம் இந்தத் தொகை காண்பிக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக அஜித் குமாரின் கணக்கு உடனடியாக பிளாக் செய்யப்பட்டது. தற்போது அவருடைய கிராமத்தில் ஒரே இரவில் பில்லியனரான அஜித் குமாரை சந்திக்க மக்கள் கூட்டம் கூட்டமாக வந்த வண்ணம் உள்ளனர். "ஆனால் இவை அனைத்தும் தனக்கு வேண்டாம் என்றும், பழைய அமைதியான வாழ்க்கையை திரும்ப வாழ விரும்புவதாகவும் அஜித் கூறியுள்ளார். இவ்வளவு பெரிய தொகைக்கு பதிலாக நான் ஏற்கனவே என் கணக்கில் வைத்திருந்த பணம் கிடைத்தாலே வரவிருக்கும் சீசனுக்கு விதைகள் மற்றும் உரங்கள் வாங்கிக் கொள்வேன்.. அந்த தொகை எனக்கு திரும்ப கிடைத்தாலே போதும்!" என்றும் அஜித் கூறியுள்ளார். உத்திரபிரதேச காவல்துறை சைபர் கிரைம் பிரிவு அவருடைய கணக்கை பிளாக் செய்து இந்த விசித்திரமான சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications