உத்தர பிரதேச மாநில அரசு தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் துறையை அதிகாரப்பூர்வமாக "தொழில்கள்" என அங்கீகாரம் அளித்துள்ளது. இந்த புதிய அங்கீகாரம் மூலம் உத்தரபிரதேசத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் குறைந்த விலைக்கு நிலங்களை கையகப்படுத்தி தொழில் செய்யலாம். இதன் மூலம் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும் பகுதியை நோக்கி படையெடுக்கும் என உத்தர பிரதேச அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
வட இந்தியாவின் முக்கியமான ஐடி மையமாக உத்தர பிரதேச மாநிலம் மாறும் என யோகி ஆதித்யநாத் அரசு நம்பிக்கை தெரிவிக்கிறது. உத்தர பிரதேச மாநிலத்தின் தொழில்துறைக்கான முதன்மை செயலாளர் அனில் குமார் சாகர் அக்டோபர் 4-ஆம் தேதி வெளியிட்ட ஆணை அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை வழங்கும் நிறுவனங்களை, இனி தொழில் மேம்பாட்டு அதிகார அமைப்புகள், மின்சார துறை மற்றும் வீட்டு வசதி துறை ஆகியவை தொழில்கள் என்ற பிரிவில் அங்கீகரித்து தொழில்களுக்கான அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதன் மூலம் ஐடி நிறுவனங்கள் இனி தடையில்லாத மின்விநியோகம் , வேகமான இன்டர்நெட் இணைப்பு உள்ளிட்ட வசதிகளையும் , சிறப்பு ஐடி பூங்காக்களையும் அணுக முடியும். ஐடி நிறுவனங்களுக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்துவதை எளிமைப்படுத்துவது மற்றும் நிதி உதவி வழங்குவது உள்ளிட்ட திட்டங்களையும் உத்தரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது. தொழில்கள் என்ற பிரிவில் அங்கீகாரம் அளித்துள்ளதால் ஐடி நிறுவனங்கள் தற்போது இருக்கும் விலையை விட குறைந்த விலைக்கு இனி உத்தர பிரதேச மாநிலத்தின் நிலங்களை கையகப்படுத்த முடியும்.
அதுமட்டுமின்றி குறைந்த மின்சார கட்டணத்தை செலுத்தலாம். உதாரணமாக நொய்டா பகுதியில் வழக்கமாக ஐடி நிறுவனங்களுக்கு ஒரு சதுர அடி விலை 73,000 ரூபாய் வரை இருக்கிறது. அதுவே தொழில் என்ற பிரிவுக்குள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு ஒரு சதுர அடி 30,000 ரூபாயிலேயே கிடைத்து விடும்.
மேலும் மின்சார கட்டணமும் ஒரு யூனிட்டுக்கு தற்போது ஐடி நிறுவனங்கள் 8 ரூபாய் செலுத்துகின்றன, இனி 7 ரூபாய் மட்டுமே செலுத்தினால் போதும். அடுத்த 5 ஆண்டுகளுக்குள் டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற நிலை எட்டுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது உத்தரபிரதேச அரசு. அதற்கேற்ற வகையில் பல்வேறு கொள்கைகளையும் வகுத்து வருகிறது.
கொள்கை மாற்றம் மூலமாக உத்தரபிரதேசத்தில் முதலீடுகள் அதிகரித்து வேலைவாய்ப்புகள் உருவாகும் என உத்தரபிரதேச அரசு கூறுகிறது. குறிப்பாக வட இந்தியாவின் ஐடி மையம் என்ற புதிய முகம் தங்கள் மாநிலத்திற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கிறது.
Written by: Devika


Click it and Unblock the Notifications