நமது பணத்தை மிகவும் பாதுகாப்பாக முதலீடு செய்வதற்கு ஏற்ற திட்டம் என்றால் அது வங்கிகளில் செலுத்தப்படும் நிலையான வைப்பு தொகைகள்தான். பெரிய அளவில் வட்டி ஆசை இல்லாதவர்கள், முதலீடு செய்தால் பத்திரமாக அசலுக்கு எந்தவித பங்கமும் வந்துவிடாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும், தங்களது சேமிப்பு பணத்தை வேறு எங்கும் முதலீடு செய்யும் வழியைத் தெரியாதவர்களும், ஓய்வுக்குப் பின் கடைசிக் காலத்தை நிம்மதியாக கழிக்க வேண்டும் என நினைக்கும் மூத்த குடிமக்களும் இதுபோன்ற வங்கிகளில் பிக்ஸட் டெபாசிட்டை செய்யவே விரும்புகின்றனர்.
பொதுவாக வங்கிகளில் பிக்ஸட் டெபாசிட்களுக்கு சாதாரண பொதுமக்களுக்கு வழங்கும் வட்டி விகிதத்தைக் காட்டிலும் மூத்த குடிமக்களுக்கு சற்றே அதிகமாக வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் வட்டி விகிதங்கள் வங்கிகளுக்கு வங்கிகள் வேறுபடுகின்றன. சாதாரண சேமிப்பு கணக்குகளுக்குத் தரப்படும் வட்டிவிகிதத்தைக் காட்டிலும் பிக்ஸட் டெபாசிட்களுக்கு சற்று கூடுதலான வட்டி அளிக்கப்படுகின்றது.

இதனிடையே ஒரு நல்ல விஷயமாக மூத்த குடிமக்கள் அல்லாமல் சாதாரண பொதுமக்களுக்கும் 9 சதவீதம் வரை Fixed deposit களுக்கு வட்டி அளிக்கும் சிறிய வங்கிகள் உள்ளன. அந்த சிறிய வங்கிகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
சூர்யோதய் ஸ்மால் பைனானஸ் பேங்க்- இந்த வங்கி பொதுமக்களுக்கு 4 முதல் 8.60 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. அதிக விகிதமான வட்டியான 8.60 சதவீதம் 2 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகால டெபாசிட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த புதிய வட்டி விகிதம் 2023 ஆகஸ்ட் 7 ஆம் தேதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது.
யூனிட்டி ஸ்மால் பைனான்ஸ் பேங்க்- யூனிட்டி ஸ்மால் பைனான்ஸ் பேங்க் 4.5 முதல் 9 சதவீதம் வரை 7 முதல் 10 ஆண்டுகால டெபாசிட்களுக்கு வட்டி வழங்குகிறது. இந்த வங்கி 1001 நாட்களுக்கு 9 சதவீதமும் 1002 நாளில் இருந்து 3 வருடங்களுக்கு 7.65 சதவீதமும் வட்டி தருகிறது.
ஃபின்கேர் ஸ்மால் பைனான்ஸ் பேங்க்- ஃபின்கேர் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் 3 சதவீதம் முதல் 8.61 சதவீதம் வரை 7 முதல் 10 ஆண்டு காலகட்டத்துக்கு வட்டி அளிக்கிறது. அதிகபட்ச வட்டி விகிதமான 8.61 சதவீதம் 750 நாட்களுக்கும் 8.15 சதவீதம் 751 நாட்கள் முதல் 30 மாத காலத்துக்கும் வட்டி தருகிறது. அது ஏறத்தாழ 2 முதல் 3 ஆண்டு காலமாகும். இந்த வட்டி விகிதம் 2023 அக்டோபர் 28 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஈஎஸ்ஏஎஃப் ஸ்மால் பைனான்ஸ் பேங்க்- மூத்த குடிமக்களுக்கு ஈஎஸ்ஏ எஃப் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் 4 சதவீதம் முதல் 8.50 சதவீதம் வட்டியை 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகாலத்துக்கான பிக்ஸட் டெபாசிட்களுக்கு வழங்குகிறது. அதிகபட்ச விகிதமான 8.50 சதவீதம் 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகளுக்கு முன்பாக முதிர்வு அடையும் டெபாசிட்களுக்கு வழங்கப்படுகிறறது. இந்த வட்டி விகிதம் 2023 ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
ஜனா ஸ்மால் பைனான்ஸ் பேங்க்- ஜனா ஸ்மால் பைனான்ஸ் பேங்க் 3 சதவீதம் முதல் 8.50 சதவீத வட்டியை 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகால டெபாசிட்களுக்கு வழங்குகிறது. இரண்டு ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கான டெபாசிட்களுக்கு 8.5 சதவீத வட்டியை ஜன ஸ்மால் பைனான்ஸ் பேங்க் வழங்குகிறது.
சிவாலிக் ஸ்மால் பைனான்ஸ் பேங்க்: 3.75 சதவீதம் முதல் 8.1 சதவீதம் வரை 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகால டெபாசிட்களுக்கு வட்டி அளிக்கிறது. 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகளுக்குக் குறைவாக முதிர்வு அடையும் டெபாசிட்களுக்கு 8 சதவீத வட்டியை தருகிறது. இந்த வட்டி விகிதம் 2023 நவம்பர் 24 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மேற்கண்ட சிறிய வங்கிகளில் டெபாசிட்களை செய்து பொது மக்கள் கூடுதலாக வட்டியை பெறலாம்.


Click it and Unblock the Notifications