தமிழ்நாட்டை சேர்ந்த மக்களுக்கு மகளிர் உரிமைத்தொகை , பொங்கல் பரிசு தொகை என அரசு சார்ந்த பல்வேறு நலத்திட்டங்கள் கிடைப்பதற்கு அடிப்படை ஆதாரமாக இருக்கிறது ரேஷன் அட்டைகள். நமக்கான ரேஷன் அட்டைகளில் நம்முடைய தகவல்களை எப்போதுமே அப்டேட் ஆக வைத்திருப்பது நல்லது.
ரேஷன் அட்டையை நாம் பல்வேறு இடங்களிலும் நமக்கான அடையாள ஆவணமாக பயன்படுத்துகிறோம். மத்திய, மாநில அரசுகளும் நமக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு முக்கியமான ஒரு தரவு தளமாக ரேஷன் அட்டை தகவல்களை தான் பயன்படுத்துகின்றன. எனவே பொதுமக்கள் தங்களுடைய ரேஷன் அட்டையில் பெயர் சேர்ப்பது, பெயர் நீக்குவது, புதிதாக விண்ணப்பம் செய்வது, தங்களின் விண்ணப்பத்தின் நிலையை அறிவது உள்ளிட்ட அவற்றை ஒரே நாளில் முடிக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு மாதமும் தமிழ்நாடு அரசு சார்பாக வாரத்தின் இரண்டாவது சனிக்கிழமையில் ரேஷன் அட்டை குறை தீர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

மாவட்டம் தோறும் வட்ட வாரியாக இந்த குறை தீர்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் மார்ச் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறை தீர்ப்பு முகாம் இன்று தமிழ்நாடு முழுவதும் நடக்கிறது. சென்னையில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களிலும் இந்த முகாம் நடத்தப்படுகிறது.
அதே போல அனைத்து மாவட்டங்களிலும் இருக்கக்கூடிய வட்ட வழங்கல் அலுவலகங்களில் பொதுமக்கள் இந்த குறை தீர்ப்பு முகாம்களில் பங்கேற்கலாம். காலை 10 மணிக்கு தொடங்கக்கூடிய ரேஷன் அட்டை குறை தீர்ப்பு முகாம் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள் தங்களுடைய ரேஷன் அட்டைகளை கொண்டு சென்று அதில் என்னென்ன மாற்றங்கள் தேவையோ அவற்றுக்கு விண்ணப்பம் செய்ய முடியும்.
ரேஷன் அட்டையில் உங்களுடைய முகவரியை மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு விண்ணப்பம் செய்தால் ஒரே நாளிலேயே கோரிக்கை பூர்த்தி செய்யப்படும். அதேபோல பெயர் திருத்தம் செய்வது , புதிதாக ஒரு உறுப்பினரின் பெயரை சேர்ப்பது ,இறந்தவர்களின் பெயரை நீக்குவது, செல்போன் எண்ணை மாற்றுவது உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பம் செய்யலாம்.
அதேபோல புதிதாக விண்ணப்பம் ரேஷன் கார்டு விண்ணப்பம் செய்வது மற்றும் நகல் அட்டை கோருவது போன்றவற்றுக்கும் இந்த முகாம்களில் தீர்வு கிடைக்கும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் தங்கள் குடும்பத்தில் இருக்கக்கூடிய ஒருவர் தங்களுக்கு மாற்றாக ரேஷன் பொருள் வாங்குவதற்கான சான்றிதழையும் பெற முடியும் . மேலும் உங்களுடைய ரேஷன் அட்டையில் இருக்கும் குடும்ப தலைவரின் பெயரை மாற்றுவது புகைப்படத்தை மாற்றுவது உள்ளிட்ட பணிகளையும் இந்த குறை தீர்ப்பு முகாம்கள் வாயிலாக நிறைவேற்றிக் கொள்ளலாம்.
ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்தும் நீங்கள் புகார் தெரிவிக்கலாம். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் ரேஷன் அட்டையில் என்னென்ன மாற்றங்கள் வேண்டுமோ அவற்றை செய்து கொள்வது நல்லது. அனைத்து மாவட்டங்களிலும் இருக்கக்கூடிய வட்ட வழங்கல் அலுவலகங்களில் இந்த குறை தீர்ப்பு முகாம் காலை 10 மணியிலிருந்து அதை ஒரு மணி வரை நடைபெற இருக்கிறது.


Click it and Unblock the Notifications