சில காலமாக ரொக்கப் பரிவர்த்தனை செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. பெட்டிக்கடை தொடங்கி பெரிய பெரிய மால்கள் வரை அனைத்திலும் டிஜிட்டல் பேமென்ட்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இதனால் யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) அபார வளர்ச்சியை எட்டியுள்ளது. ஜனவரி முதல் நவம்பர் 2024 வரையிலான காலகட்டத்தில் சுமார் 15,547 கோடி பரிவர்த்தனைகளின் மூலம் ரூ.223 லட்சம் கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் UPI மூலம் நடைபெற்றுள்ளது. இந்தத் தகவலை நிதி அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் பகிர்ந்திருக்கிறது.
#FinMinYearReview2024 என்ற ஹேஷ்டேக்குடன், நாட்டில் யுபிஐ பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. அதோடு யுபிஐ பரிவர்த்தனைகள் உலகளவில் அங்கீகாரம் பெற தொடங்கியிருக்கிறது. தற்போது யுபிஐ ஆனது துபாய், சிங்கப்பூர், பூட்டான், நேபாளம், இலங்கை, பிரான்ஸ், மொரிசியஸ் போன்ற 7 நாடுகளில் இயங்கி வருகிறது. இந்தியாவில் தொடங்கிய டிஜிட்டல் பேமென்ட் தளங்கள் உலக அளவில் விரிவடைந்து வருவதை நிதி அமைச்சகத்தின் போஸ்ட் தெள்ளத்தெளிவாக காண்பிக்கிறது.

2016-ஆம் ஆண்டு நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) மூலம் தொடங்கப்பட்டது தான் UPI. பல வங்கி கணக்குகளை ஒரே மொபைல் பிளாட்பார்மில் இணைத்து இந்தியாவின் கட்டண முறையில் மிகப் பெரிய புரட்சியை யுபிஐ ஏற்படுத்தியிருக்கிறது. பயனர்களுக்கு உடனடியான பணப்பரிவர்த்தனை செலுத்த UPI தளங்கள் உதவிகரமானதாக உள்ளது.
அதோடு வணிகர்களுக்கு பணம் செலுத்துவது, ஃபோன் நம்பரின் மூலம் ஒரு சில கிளிக்குகளில் பணம் செலுத்துவது என வங்கிக்கு சென்று பணப்பரிவினை செய்வதை வெகுவாக குறைத்துள்ளது. பணமில்லா பொருளாதாரத்தை நோக்கி இந்தியாவை நகர்த்துவதில் யுபிஐ பெரும் பங்காற்றி வருகிறது.

யுபிஐ ஆனது அக்டோபர் 2024-ஆம் ஆண்டில் மட்டும் 16.58 பில்லியன் பரிவர்த்தனைகளைச் செய்துள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ. 23.49 லட்சம் கோடி ஆகும். அதேபோல அக்டோபர் மாதத்தில் 11.40 பில்லியன் பரிவர்த்தனைகளை செயல்படுத்தி இருக்கிறது. 2023-ஆம் ஆண்டை விட யுபிஐ மூலம் செய்யப்பட்ட பரிவர்த்தனைகளின் மதிப்பு 2024-ஆம் ஆண்டில் 45 சதவீதம் அதிகரித்துள்ளது.
எங்கும் டிஜிட்டல் எதிலும் டிஜிட்டல் என்று இந்தியா சென்று கொண்டிருக்கையில் யூபிஐ தளத்தின் அறிமுகம் பல்வேறு சேவைகளை பெறவும் வசதியானதாக மாறியது;. எலக்ட்ரிசிட்டி பில் செலுத்துவது, பணம் அனுப்புவது, பணம் பெறுவது என அனைத்தையும் மக்கள் வீட்டில் இருந்தே செய்கின்றனர். இந்தியாவின் கட்டண முறையில் தற்போது மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. வங்கிகளுக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று பரிவர்த்தனை செய்த காலம் போய் தற்போது வீட்டில் இருந்தே பணப்பரிவர்த்தனை செய்கின்றனர். இனிவரும் காலங்களிலும் யுபிஐ பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை மற்றும் மதிப்பு உயரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications