இந்தியாவில் வரும் 15ஆம் தேதி முதல் யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் கட்டணம் அமல்படுத்தப்பட இருந்த நிலையில் திடீரென அது ஒத்தி வைக்கப்படுவதாக NPCI அறிவித்துள்ளது.
நம் நாட்டின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் மிக முக்கியமான மைல்கல்லாக யூபிஐ பார்க்கப்படுகிறது. இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் யூபிஐ பரிவர்த்தனைகள் பயன்படுத்தப்படுகின்றன. இது இலவசமாக இருந்த நிலையில் வணிகர்களுக்கு மட்டும் கட்டணம் விதிக்கும் வணிக தள்ளுபடி விகித கட்டணம் (MDR - Merchant Discount Rate) கொண்டுவரப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதன் படி தனிநபர் இடையிலான யூபிஐ பரிவர்த்தனை எப்போதும் போல இலவசம் தான். ஆனால் 2000 ரூபாய்க்கு மேல் கொண்ட வணிக ரீதியான பரிவர்த்தனைக்கு வணிகர்கள் 0.40% எம்டிஆர் கட்டணம் செலுத்த வேண்டும். எம்டிஆர் கட்டணத்தால் பொதுமக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் கூடுதல் செலவும் இல்லை. ஆனால் வணிகர்கள் இந்த கட்டணத்தை ஏற்றாக வேண்டும். வங்கிக்ள் மற்றும் பேமெண்ட் நிறுவனங்களுக்கு இந்த கட்டணம் செல்லும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் வணிகர்களுக்கு கூடுதல் செலவு ஏற்படும் என கவலை தெரிவித்தனர்.
அக்டோபர் 15 முதலே இது அமலுக்கு வருவதாக இருந்த நிலையில் தீபாவளி , தசரா பண்டிகைகளின் போது 2000 ரூபாய்க்கு மேல் தான் அதிக விற்பனை நடக்கும் , இந்த சமயத்தில் எம்டிஆர் கட்டணம் வந்தால் தங்களுக்கு நஷ்டம் தான் எனவே இதனை தள்ளி போட வேண்டும் என வணிகர்கள் , வியாபாரிகள் சார்பாக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்று எம்டிஆர் கட்டண அமலாக்கம் தீபாவளி பண்டிகைக்கு பிந்தைய காலத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக NPCI அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை கால ஷாப்பிங் காலத்தில் நுகர்வோருக்கும் வணிகர்களுக்கும் எந்த தடையும் குழப்பமும் இருக்க கூடாது என்ற நோக்கட்திலும் வணிக நலன்களை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிக அமைப்புகள், ஃபின்டெக் நிறுவனங்கள் மற்றும் பேமெண்ட் நிறுவனங்கள் தரப்பிலிருந்து பண்டிகை காலத்தில் எம்டிஆர் கட்டணங்களால் வணிக செலவுகள் அதிகரித்து, நுகர்வோர் மத்தியில் எதிர்மறையான தாக்கம் ஏற்படக்கூடும் என கவலை தெரிவித்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அக்டோபர் 15 முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த எம்டிஆர் கட்டண முறை, தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய அமலாக்க தேதி எப்போது என்பது குறித்த அறிவிப்பு தீபாவளிக்கு பிறகு வெளியிடப்படும் என NPCI தெரிவித்துள்ளது.
எம்டிஆர் அமலாக்கம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் வங்கிகள், பேமெண்ட் சேவை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் வணிகர்களுக்கு புதிய கட்டண கட்டமைப்பு முறைக்கு தயாராவதற்கு கூடுதல் அவகாசத்தை வழங்கியுள்ளதுடன், வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் வணிகர்களுக்குப் பெரும் நிம்மதியையும் அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications

