இந்தியாவில் ஒவ்வொரு நிமிடமும் லட்சக்கணக்கானவர்கள் யுபிஐ பேமென்ட் பயன்படுத்தி பணப்பரிவர்த்தனையில் ஈடுபடுகிறார்கள். இந்த பரிவர்த்தனையில் நவம்பர் 3ஆம் தேதியில் இருந்து மிக முக்கியமான ஒரு மாற்றம் வர இருக்கிறது. இந்த மாற்றம் நம்முடைய யுபிஐ பரிவர்த்தனையை துரிதப்படுத்துவதோடு மட்டுமில்லாமல் சீரான முறையில் பரிவர்த்தனை நடைபெறுவதையும் உறுதி செய்யும்.
தற்போது யுபிஐ ஒரு நாளைக்கு பத்து செட்டில்மெண்ட் சுழற்சிகள் (Settlement cycles) ஆர்டிஜிஎஸ் வழியாக செயல்படுத்தப்படுகின்றன. இந்த சுழற்சிகளில் அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகள் (authorised transactions) மற்றும் சர்ச்சைக்குரிய அதாவது பிரச்சனைக்குரிய பரிவர்த்தனைகள் (dispute-related settlements) என இரண்டு பரிவர்த்தனைகளாக பிரிக்கப்படுகின்றன .

இதில் அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகள் என்பது வழக்கமாக நாம் ஒருவருக்கு பணத்தை அனுப்புவது அல்லது பெறுவது என்ற வகையின் கீழ் வரும். டிஸ்பியூட்டட் பரிவர்த்தனை என்பது பணத்தை நாம் அனுப்பும்போது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டு பாதியிலேயே பணம் நின்று விடுவது அல்லது பணம் நமக்கு ரிவர்ஸ் ஆவது அல்லது ரீஃபண்ட் செய்யப்படுவது போன்ற முழுமை பெறாத பரிவர்த்தனையை டிஸ்ப்யூட் பரிவர்த்தனை என அழைப்பார்கள்.
தற்போது இந்தியாவில் யுபிஐ பயன்பாடு என்பது நாள்தோறும் அதிகரித்து வருகிறது. புதிது புதிதாக நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் யுபிஐ செயலிகளை பயன்படுத்துகின்றனர், யுபிஐ மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். எனவே இப்படி ஒரே ஒருங்கிணைந்த முறையில் இந்த அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகளையும் சர்ச்சைக்குரிய பரிவர்த்தனைகளையும் செட்டில் செய்வதால் தாமதங்கள் ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.
நவம்பர் மூன்றாம் தேதியில் இருந்து என்பிசிஐ ஒரு முக்கிய மாற்றத்தை நடைமுறைக்கு கொண்டு வருகிறது. இதன்படி அங்கீகரிக்க மற்றும் சர்ச்சைக்குரிய பரிவர்த்தனைகள் இனி தனித்தனியாக பிரித்து தனிப்பட்ட சுழற்சிகளில் கையாளப்படும் என தெரிவித்திருக்கிறது . நவம்பர் 3 முதல் நடைமுறைக்கு வரக்கூடிய இந்த புதிய விதிமுறைகளின் படி அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகள் மட்டுமே தினமும் நடைபெறக்கூடிய வழக்கமான பத்து சுழற்சிகளில் கையாளப்படும் .
அதே நேரத்தில் இந்த சர்ச்சைக்குரிய பரிவர்த்தனைகளுக்காக பிரத்தியேகமாக டிசி1 மற்றும் டிசி 2 என இரண்டு புதிய சுழற்சிகள் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணி வரையிலான 10 சுழற்சிகளில் அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகள் மட்டுமே கையாளப்படும் என்றும் நள்ளிரவு முதல் மாலை 4 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் நள்ளிரவு வரை என இரண்டு சுழற்சிகள் சர்ச்சைக்குரிய பரிவர்த்தனைகளுக்கு என மாற்றப்படுகின்றன .
இப்படி அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு தனி சுழற்சிகள் கொண்டுவரப்படுவதால் நம் யுபிஐ பண பரிவர்த்தனை மேலும் விரைவானதாக மாறும். அது தவிர பரிவர்த்தனையில் ஏற்படும் சிக்கல்கள் தனி சுழற்சிகளில் கையாள ப்படுவதால் பிரச்சினைகளும் விரைவாக தீர்க்கப்படும் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications