இந்தியாவின் UPI நிதி பரிமாற்ற சேவை இலங்கை மற்றும் மொரிஷியஸ் நாட்டில் இன்று பிப்ரவரி 12 முதல் தொடங்கப்பட உள்ளது. இந்திய டிஜிட்டல் நிதி பரிமாற்ற முறையைத் தலைகீழாக மாற்றியுள்ள யூபிஐ சேவை தற்போது கடல் கடந்து பிற நாடுகளுக்கும் சென்று வருகிறது.
கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டு பரிமாற்றங்களைக் காட்டிலும் எளிதாக, மிகவும் குறைவான கட்டணத்திலும், குறைவான செலவிலும் நிதி பரிமாற்றம் செய்யும் கட்டமைப்பைக் கொண்டுள்ளது UPI. இதன் காரணமாகப் பல வளரும் நாடுகள் தற்போது இந்தியாவின் யூபிஐ சேவையைப் பெற விருப்பம் தெரிவித்து வருகிறது.

இது மட்டும் அல்லாமல் உலக நாடுகள் முழுவதும் டிஜிட்டல் பரிமாற்றம் என்றால் விசா, மாஸ்டர்கார்ட் ஆகிய இரு நிறுவனங்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதை உடைக்கப் பல நாடுகள் முயற்சி செய்தாலும் பெரிய அளவிலான தாக்கத்தைச் சர்வதேசச் சந்தையில் கொண்டு வர முடியவில்லை.
ஆனால் இந்தியாவின் NPCI அமைப்பு மாற்று வழியில் சென்று மொத்தமும் டிஜிட்டல் அடிப்படையிலான பேமெண்ட்-ஐ கொண்டு வந்தது பலருக்கும் சாதகமாக மாறியது. இதேபோல் யூபிஐ ஒரு பேமெண்ட் செய்யக்கூடிய தளம் இது வங்கிக் கணக்குகளுக்கு மத்தியிலான நிதி பரிமாற்றம் என்பதால் இத்தளத்தைப் பிற நாடுகள் பயன்படுத்த மிகவும் ஆர்வம் காட்டி வருகிறது.
இந்த வகையில் யூபிஐ பேமெண்ட் தளத்தைச் சமீபத்தில் பிரான்ஸ் அரசு ஏற்றக்கொண்டதைத் தொடர்ந்து யூபிஐ சேவையைப் பயன்படுத்தும் நாடுகள் பட்டியல் தற்போது விரிவாக்கம் அடைய உள்ளது. இதன் மூலம் இந்தியர்கள் அந்த நாட்டிற்குச் செல்லும் போதும், அந்த நாட்டவர் இந்தியாவுக்கு வரும் போதும் டிஜிட்டல் முறையில் பணத்தைச் செலுத்திக்கொள்ளும் வாய்ப்பும் தற்போது உருவாகியுள்ளது.
பிப்ரவரி 12 ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்குப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் முறையில் பேச உள்ளார். இந்த வெளியீட்டு விழாவில் அந்தந்த மத்திய வங்கி ஆளுநர்களும் கலந்துகொள்வார்கள்.
மொரிஷியஸில் UPI தவிர, RuPay அட்டை சேவைகளும் தொடங்கப்படும். அதாவது இந்திய அரசு அமெரிக்க நிறுவனங்களான விசா, மாஸ்டர்கார்டு ஆகியவற்றின் ஆதிக்கத்தை உடைக்க உருவாக்கப்பட்ட ரூபே கார்டு இனி மொரிஷியஸ் நாட்டிலும் பயன்படுத்தப்படும்.
இந்த விரிவாக்கம் மூலம் இனி மொரிஷியஸ் வங்கிகள் ரூபே கார்டுகளைத் தன் நாட்டு மக்களுக்கு வழங்க முடியும். இதேபோல் ரூபே கார்டு மூலம் இரு நாட்டவர்களும், இரு நாடுகளிலும் எவ்விதமான தங்குதடையுமின்றிப் பணப் பரிமாற்றம் செய்துகொள்ள முடியும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்திய அரசு ரூபாய் அடிப்படையிலான பேமெண்ட் மற்றும் இந்தியாவின் சொந்த நிதி பரிமாற்ற சேவைகளை உலகளவில் பயன்படுத்த ஊக்குவித்து வருகிறது. RBI ஜூலை 2022 இல் உலகளாவிய வர்த்தக நிதி பரிமாற்றத்தை ரூபாய் அடிப்படையில் தீர்ப்பதற்கான வழிமுறையை அமைப்பதாக அறிவித்தது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம், UPI சேவையை UAE இன் உடனடி பணம் செலுத்தும் தளம் அல்லது IPP உடன் இணைக்க இந்தியா ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்திய சுற்றுலாப் பயணிகள் ஈபிள் கோபுரத்திலிருந்து UPI ஐ பயன்படுத்தி ரூபாய் செலுத்த முடியும் என்று மோடி தனது பிரான்ஸ் பயணத்தின் போது அறிவித்தது தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
அதற்கு முன் பிப்ரவரியில், இந்தியாவும் சிங்கப்பூரும் UPI மற்றும் சிங்கப்பூரின் வேகமான கட்டண முறையான PayNow ஐ இணைக்க ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்தோனேசியா மற்றும் லத்தீன் அமெரிக்க மற்றும் ஆப்ரிக்கா நாடுகளுடன் தற்போது ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.


Click it and Unblock the Notifications