டெல்லி: இந்தியாவில் பட்டித் தொட்டி எங்கும் யுபிஐ சேவைகள் பிரபலம் அடைந்திருக்கும் நிலையில் யுபிஐ பயனாளர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்தியா மட்டுமில்லாமல் சர்வதேச நாடுகளிலும் யுபிஐ அடிப்படையிலான பண பரிமாற்றத்தை ஏற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது.
இந்தியாவில் நாம் இதற்கு முன்பெல்லாம் எங்கு செல்ல வேண்டும் என்றாலும் கையில் பணத்தை கொண்டு செல்ல வேண்டி இருக்கும், அந்த பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க படாத பாடு பட வேண்டி இருக்கும். ஆனால் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அறிமுகமானதை அடுத்து இந்தியாவில் கொண்டுவரப்பட்ட யுபிஐ எனப்படும் யுனிஃபைட் மேமென்ட் சேவைகள் நம் செல்போனில் இருந்தே அனைத்து வகையான கட்டணங்களையும் செலுத்துவதற்கான வழிவகையை ஏற்படுத்தி தந்துள்ளது.

ஒரு கியூஆர் கோடு அல்லது செல்போன் நம்பர் இருந்தாலே போதும் நாம் எளிதாக நம்முடைய வங்கி கணக்கிலிருந்து அந்த குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி விட முடிகிறது. இந்தியாவில் யுபிஐ சேவைகளை நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா எனப்படும் என்பிசிஐ அமைப்புதான் கண்காணித்து வருகிறது. கூடிய விரைவில் இந்தியாவில் யுபிஐ சேவையில் கூடுதலாக 200 முதல் 300 மில்லியன் பயனாளர்களை கொண்டு வர வேண்டும் என என்பிசிஐ திட்டமிட்டு இருக்கிறது.
என்பிசிஐ அமைப்பின் மேலாண் இயக்குனராக செயல்பட்டு வரக்கூடிய திலீப் , கூடிய விரைவில் யுபிஐ சேவைகளில் பல்வேறு வசதிகள் கொண்டு வரப்பட இருப்பதாக தெரிவித்திருக்கிறார். குறிப்பாக பாரம்பரியமான வங்கி கணக்கு இல்லாத குழந்தைகள், வீட்டு வேலை செய்பவர்கள் உள்ளிட்டவர்களுக்கும் யூபிஐ சேவைகளை எளிதாக்கும் வகையில் Delegated accounts எனப்படும் நியமிக்கப்பட்ட கணக்குகள் மூலம் பரிவர்த்தனைகளை அனுமதிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் 450 மில்லியன் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தும் நடைமுறையையே இந்த யுபிஐ மாற்றி அமைத்திருக்கிறது, ஒரு சிறிய டீயாக இருந்தாலும் சரி அல்லது வீட்டிற்கு தேவையான ஒரு பொருளாக இருந்தாலும் சரி அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை யுபிஐ வாயிலாக நாம் வாங்கும் பொருட்களுக்கு பணம் செலுத்தி விட முடிகிறது. இதற்கு நாம் எந்த பரிவர்த்தனை கட்டணமும் செலுத்த வேண்டிய தேவையில்லை .
நாட்டின் மூலை முடுக்கெங்கும் யுபிஐ பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு வசதியாக மாறி இருக்கிறது. உலக அளவில் நடைபெறக்கூடிய டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 46 சதவீதம் இந்தியாவின் யுபிஐ சேவைகள் வழியாகத்தான் நடக்கிறது. கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 90 மடங்கு இந்தியாவில் சில்லறை வணிகத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா மட்டுமில்லாமல் பிரான்ஸ், இலங்கை, நேபாளம், மொரீஷியஸ், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் யுபிஐ மூலம் நாம் பணம் செலுத்தும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இது மேலும் பல நாடுகளுக்கு விரிவாக்கம் செய்யப்படுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.


Click it and Unblock the Notifications