இந்தியர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு உணவு இட்லி. குறிப்பாக தென்னிந்திய மக்களின் காலை உணவே இட்லி தான். இட்லி தயாரிக்க பயன்படுத்தப்படும் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவற்றின் விலையில் ஏற்படும் எந்த ஒரு மாற்றமும் கோடிக்கணக்கான இந்திய குடும்பங்கள் மத்தியிலும் உணவகங்களிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்தியாவில் விரைவில் உளுத்தம் பருப்பு உயர போவதாக தகவல் வெளியாகியுள்ளது. எல்நினோ உள்ளிட்ட பருவநிலை மாற்றம், தாமதமான பருவமழை ஆகியவை காரணமாக உளுத்தம் பருப்புக்கான பயிர் சாகுபடி பரப்பு இந்த ஆண்டு 40% வரை குறைந்துள்ளது. மத்திய அரசு வெளியிட்ட ஒரு தரவின் மூலம் இந்தியாவில் உளுத்தம் பருப்பு சாகுபடி 40 % வரை குறைந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களில் தான் அதிக எண்ணிக்கையில் கருப்பு உளுந்து சாகுபடி செய்யப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யக்கூடிய பாதி உளுத்தம் பருப்பு இந்த மூன்று மாநிலங்களில் இருந்து தான் கிடைக்கிறது. ஆனால் இந்த மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் பருவநிலை கால மாற்றங்களில் இருந்து தப்பிக்க கூடிய சோயாபீன் , மக்காச்சோளம் போன்ற பயிர்களை அதிக அளவில் விளைவிக்க தொடங்கி இருக்கிறார்கள்.
உளுத்தம் பருப்பு சாகுபடிக்கு சரியான பருவமழை வேண்டும் , பருவமழை தாமதமானலும் குறைவாக மழை பெய்தாலும் மொத்தமாக நஷ்டம் தான். எனவே அதனை விதைத்து சிக்கலில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக இந்த மூன்று மாநிலத்தை சேர்ந்த விவசாயிகளும் அதிக அளவில் மாற்றுப் பயிர்களை பயிரிட்டுள்ளனர். இதனால் இந்தியாவில் 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை 2.8 மில்லியன் டன்களாக இருந்த உளுத்தம்பருப்பு உற்பத்தி 2026 ஆம் நிதி ஆண்டில் 2.2 மில்லியன் டன்களாக குறைந்திருக்கிறது.

இதனால் உள்நாட்டு சந்தையில் உளுத்தம்பருப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கி இருக்கிறதாம். ஏற்கனவே மத்திய பிரதேச மாநில சந்தைகளில் ஒரு குவிண்டால் உளுத்தம் பருப்பு மொத்த விற்பனை சந்தையில் 9200 ரூபாய் என விலை உயர்ந்துள்ளதாம். இது கடந்த 3 ஆண்டுகளில் சராசரியாக 5,500 ரூபாயாக தான் இருந்திருக்கிறது. எனவே நிச்சயம் நம் கைகளுக்கு வரும் போது உளுத்தம் பருப்பின் விலை அதிகரித்து தான் இருக்கும்.
தற்போது உள்நாட்டில் உளுத்தம்பருப்பு உற்பத்தி குறைந்திருப்பதால் இந்தியா வேறு வழியில்லாமல் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்தாக வேண்டும். 2026 ஆம் நிதி ஆண்டில் மட்டும் இந்தியா 10.5 லட்சம் டன்கள் உளுத்தம் பருப்பு இறக்குமதி செய்திருக்கிறது 2023 ஆம் தேதி ஆண்டில் வெறும் 6 லட்சம் டன்களாக தான் இருந்திருக்கிறது. 2027 ஆம் நிதி ஆண்டில் உளுத்தம்பருப்பு இறக்குமதி சுமார் 12 லட்சம் டன்களை எட்டும் என சொல்லப்படுகிறது.
எனவே நுகர்வோர் மீது தான் இறக்குமதி செலவு சுமத்தப்படும். குறிப்பாக கரீஃப் பருவத்தில் தான் தரமான உளுந்து கிடைக்கும்ம் ஆனால் அதுவே இந்த ஆண்டு சரிந்திருக்கிறதாம். இந்தியாவில் எப்போதும் உளுத்தம் பருப்புக்கு தேவை உண்டு. அதுவும் பண்டிகைக் காலங்களில் பருப்புக்கான தேவை சந்தையில் அதிகரிக்கும் என்பதால், வியாபாரிகள் முன்கூட்டியே கையிருப்பைச் சேகரித்து வைக்க முயற்சி செய்கின்றனர். இதுவும் விலை உயர ஒரு காரணமாகிறது.
உளுத்தம் பருப்பு விலை ஏறினால் நம் மாதாந்திர பட்ஜெட்டிலும் மளிகை பொருட்களுக்கு கூடுதல் பணத்தை ஒதுக்க வேண்டி இருக்கும். அதே வெளையில் ஹோட்டல்களில் இட்லியின் விலை உயர்த்தப்படும். தற்போது உளுத்தம் பருப்பு விலை ஓரளவுக்குக் கட்டுக்குள் இருந்தாலும், வரத்து குறைவாக உள்ளதால் வரும் நாட்களில் விலை குறையும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மத்திய அரசு பருப்பு விலை விண்ணைத் தொடாமல் தடுக்க அவ்வப்போது தனது கையிருப்பிலிருந்து சந்தைக்கு பருப்பை விடுவிப்பது, இறக்குமதியை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் விவசாயிகளை ஊக்கப்படுத்த குறைந்தபட்ச ஆதரவு விலை மூலம் அரசே உளுந்து உள்ளிட்ட பருப்பு வகைகளை நேரடியாக கொள்முதல் செய்யும் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications

