தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் வாயிலாக இலவச அரிசி வழங்கப்படுகிறது. பெரும்பாலான குடும்பங்களின் உணவு ஆதாரமே ரேஷனில் இலவசமாக கிடைக்கும் அரிசி தான். இந்த இலவச அரிசி தொடர்ந்து கிடைக்கும் வேண்டும் என்றால் ரேஷன் அட்டை தாரர்கள் பின்வரும் ஒரு முக்கியமான வேலையை முடிக்க வேண்டும். இல்லை என்றால் அடுத்த மாதம் முதல் இலவச அரிசி கிடைக்காமல் போகலாம்.
தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைதாரர்கள் தங்களின் அட்டைகளில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கைவிரல் ரேகை பதிவை (பயோமெட்ரிக்) ரேஷன் கடைக்கு சென்று புதுப்பித்து கொள்ள வேண்டும். இந்த மாத இறுதிக்குள் இதனை முடிக்க வேண்டும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்கவும், பொது விநியோகத் திட்டத்தில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்கும் வகையிலும், இலவசங்களும் மானியங்களும் சரியான பயனர்களை தான் சென்று சேர்கிறது என்பதை உறுதி செய்யவும் பயோமெட்ரிக் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தங்களது பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிக்க தவறும் கார்டுதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகத்தை நிறுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் முதலில் ரேஷன் கடைக்கு சென்று பயோமெட்ரிக் வைக்க வேண்டுமா என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அனைத்து கார்டுகளுக்கும் தேவை இருக்காது, ஒரு வேளை உங்களின் கார்டுக்கு இருந்தால் அதனை ரேஷன் கடையில் தான் தெரிந்து கொள்ள முடியும்.
வேலை அல்லது இதர காரணங்களுக்காக வெளியூர்களில் தற்காலிகமாகத் தங்கியிருப்பவர்கள், தங்களுக்கு அருகில் உள்ள ஏதேனும் ஒரு ரேஷன் கடைக்கு சென்று இம்மாத இறுதிக்குள் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
மேலும், ரேஷன் அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் யாரேனும் இறந்திருந்தால், அவர்களின் பெயர்களை வட்ட வழங்கல் அலுவலகத்தை அணுகி உரிய ஆவணங்களுடன் உடனடியாக நீக்க வேண்டும் என அதிகாரிகள் கூறுகின்றனர். அலுவலகம் செல்ல முடியாதவர்கள், தங்களது பகுதி ரேஷன் கடை விற்பனையாளரிடம் இறந்தவரின் குடும்ப அட்டை எண் மற்றும் ஆதார் அட்டையின் நகலைச் சமர்ப்பித்து பெயரினை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைனிலேயே கூட tnpds தளத்திலும் இதற்காக விண்ணப்பம் செய்யலாம்.
முதலில் உங்கள் ரேஷன் கடைக்கு சென்று கைவிரல் ரேகை பதிவு செய்ய வேண்டுமா என தெரிந்து கொள்ளுங்கள். அவ்வாறு இருந்தால் குடும்ப அட்டையில் இருக்கும் அனைவரையும் அழைத்து சென்று கைவிரல் ரேகை பதிவை முடித்து கொள்ளுங்கள். இதனை தவறவிட்டால் அரசின் பல நலத்திட்டங்கள் கூட நின்று போகலாம்.


Click it and Unblock the Notifications

