டெல்லி: இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி இந்தியாவில் ஜனநாயகம் குறித்த கவலைகள் எழுவதை நிராகரித்துள்ளார். மேலும் இந்தியர்கள் பல வழிகளில் அமெரிக்கர்களை விட சிறந்தவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
டெல்லியில் வெளியுறவுத்துறை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய எரிக் கார்செட்டி, இன்னும் பத்து ஆண்டுகளில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களின் அடிப்படையில் இந்தியா ஒரு துடிப்பான ஜனநாயகமாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியாவில் ஜனநாயகத்தின் நிலை குறித்த கவலைகளை வெளிப்படுத்தும் கேள்விக்கு பதில் அளித்த அவர், அத்தகைய கவலையே தேவையில்லை என்றார். குறிப்பாக இந்தியாவில் தேர்தல்கள் நடத்தப்படும் விதத்தை சுட்டிக்காட்டிய அவர் இதுவே ஜனநாயகம் வளர்ந்து வருவதற்கான சான்று என கூறினார்.
ஒரு மலைப்பகுதியில் இருக்கும் ஒரு தனிநபர் வாக்களிக்க தேர்தல் ஆணையம் செய்யும் ஏற்பாடுகள், அதிகாரிகள் மலையேறி செல்வது, வாக்கு இயந்திரங்களை சுமந்து செல்வது என்பன போன்ற நிகழ்வுகளை அவர் குறிப்பிட்டார். இந்திய மக்கள் வாக்களிக்க காட்டும் ஆர்வத்தையும் அவர் வியப்பாக கூறினார். நீண்ட தூரம் நடந்து வந்து கூட மக்கள் வாக்களிக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.
வாக்குகளுக்கு பணம் கொடுக்கப்படுவதை தடுக்க மக்களே கண்காணிப்பாளர்களாக செயல்படுகின்றனர், பணம் கொண்டு வர கூடாது என மக்களே வாகனங்களை சோதனையிடும் செய்திகளை தான் கண்டதாகவும் எரிக் கார்செட்டி குறிப்பிட்டார். இப்படி பல வழிகளில் இந்தியர்கள் அமெரிக்கர்களை விட சிறந்தவர்கள் என பெருமையாக தெரிவித்தார்.
ஜனநாயக மதிப்புகளுக்கு துணை நிற்பதே அமெரிக்காவின் நோக்கம் என்று கூறிய அவர் இந்தியா- அமெரிக்கா இடையிலான உறவு சிறப்பாக இருப்பதாக தெரிவித்தார். 21ஆம் நூற்றாண்டை வரையறுக்கும் ஒரு உறவாக இந்தியா- அமெரிக்கா உறவு இருக்கும் என அவர் உறுதிப்பட தெரிவித்தார். இந்தியாவுடனான உறவில் அமெரிக்கா 100 சதவிகிதம் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் கூறினார்.
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தேர்தல் நடத்தப்படும் முறை குறித்தும் வெளிநாட்டு தலையீடுகள் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன. இந்த சூழலில் தான் இந்தியாவின் ஜனநாயகம் குறித்து கவலைப்பட தேவையில்லை என எரிக் கார்செட்டி கூறியுள்ளார்.
story written by: Devika


Click it and Unblock the Notifications