அமெரிக்கா - கனடா மத்தியிலான வர்த்தக மோதல் தீவிரமடைந்து வருவது உலகளாவிய வர்த்தகச் சூழலில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் 2வது முறையாக ஆட்சிக்கு வந்த பின்பு வரி விதிப்பு மூலம் உலக நாடுகளையும், வர்த்தக சந்தையையும் பந்தாடினார். தற்போது மீண்டும் கனடா, ஈரான் மீது வர்த்தக போரை துவங்கியுள்ளார்.
டிரம்ப் அரசின் புதிய வரி மிரட்டல்களுக்கு பதிலடியாக, கனடா அமெரிக்க பொருட்களுக்கு வரியை அறிவிக்கத் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவுக்கு பதிலடி கொடுப்பதைவிட, கனடா தொழில்கள் மற்றும் தொழிலாளர்களை பாதுகாப்பது தான் முக்கியம் என கனடா நாட்டின் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

டிரம்ப், கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள், ஆட்டோ உதிரிபாகங்கள் மற்றும் எஃகுக்கு 50% வரி விதிக்கப்படும் எனவும், இது ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வர்த்தக நடவடிக்கைகள் கனடாவின் ஆட்டோமொபைல், எஃகு மற்றும் அலுமினிய தொழில்களை கடுமையாக பாதிக்கக்கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது. இந்த வரி கனடாவின் முக்கிய தொழில்துறைகளை முழுமையாக அழிக்க முயற்சிப்பதாக பிரதமர் மார்க் கார்னி குற்றம்சாட்டியுள்ளார். வாஷிங்டன் கனடாவை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பதாக கார்னி விமர்சித்துள்ளார்.
இதுவரை அமெரிக்கா விதிக்கும் வரிக்கு இணையான அளவில் பதிலடி கொடுக்கும் அணுகுமுறையை கனடா பின்பற்றியது. இனி டாலருக்கு டாலர் என்ற அடிப்படையில் அல்லாமல், குறிப்பிட்ட அமெரிக்க துறைகளை இலக்கு வைத்து பதிலடி கொடுக்க திட்டமிட உள்ளோம் என மார்க் கார்னி தெரிவித்துள்ளார். கனடா நாட்டின் நிதியமைச்சரான Francois-Philippe Champagne உள்ளிட்ட நான்கு முக்கிய அமைச்சர்கள், அமெரிக்காவுக்கான கனடாவின் பதிலடி நடவடிக்கைகளை செவ்வாய்க்கிழமை காலை அறிவிக்க உள்ளனர்.
அமெரிக்கா-கனடா வர்த்தக மோதல் தீவிரமடைந்தால், உலகளாவிய ஆட்டோமொபைல், எஃகு மற்றும் அலுமினிய விநியோகச் சங்கிலியில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் மறைமுக தாக்கம் இந்திய ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தித் துறையிலும் இருக்கிறதா என்பதை தொடர்ந்து கவனிக்கலாம். இன்றைய கனடாவின் அறிவிப்புக்காக உலக நாடுகள் காத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications