அமெரிக்கா டெக் நிறுவனங்கள் திறன்மிகு வெளிநாட்டவர்களை அமெரிக்காவிற்கு வரவழைத்து பணிக்கு அமர்த்த ஹெச்1பி விசாவை பயன்படுத்துகின்றன. இவ்வாறு ஹெச்1பி விசாவில் அமெரிக்கா செல்பவர்களில் 70% பேர் இந்தியாவை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் .
அமெரிக்க அரசு அண்மை காலமாக ஹெச்1பி விசாவில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. ஹெச்1பி விசா அமெரிக்கர்களின் வேலை வாய்ப்புகளை பறிக்கிறது என்ற மனநிலை அமெரிக்கா முழுவதும் பரவி கிடக்கிறது. அமெரிக்க நிறுவனங்கள் குறைந்த சம்பளத்தில் h1d விசாவில் ஊழியர்களை வேலைக்கு அமர்த்திவிட்டு அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை தராமல் இருக்கின்றன என பலரும் சாடி வருகின்றனர் .

இந்த சூழலில் தான் ஹெச்1பி விசாவில் இந்தியாவில் மிகப்பெரிய முறைகேடு நடப்பதாக முன்னாள் அமெரிக்க எம்பி ஒருவர் வெளியிட்டிருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னையில் மட்டும் ஒரே ஆண்டில் 2.2 லட்சம் பேருக்கு ஹெச்1பி விசா வழங்கப்பட்டிருப்பதாகவும் இது மிகப்பெரிய ஒரு குளறுபடி என்றும் அவர் கூறியிருக்கிறார். பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமெரிக்க எம்பியும் பொருளாதார நிபுணருமான டாக்டர் டேவ் பிராட் ,இந்தியாவில் ஹெச்1பி விசாவில் மிகப்பெரிய மோசடி நடப்பதாக கூறியிருக்கிறார் .
ஒரு ஆண்டுக்கு 85,000 பேருக்கு தான் ஹெச்1பி விசா வழங்க வேண்டும் என அமெரிக்காவில் சட்டம் இருக்கிறது , ஆனால் இந்தியாவில் சென்னையில் செயல்படும் அமெரிக்க தூதரகத்தில் மட்டும் ஒரே ஆண்டில் 2.2 லட்சம் ஹெச்1பி விசா வழங்கப்பட்டுள்ளது, அரசின் வரம்பை விட இது 2.5 மடங்கு அதிகம் இது எப்படி சாத்தியமானது என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இந்தியாவில் ஹெச்1பி விசாவில் மிகப்பெரிய அளவில் மோசடி நிகழ்கிறது என கூறி இருக்கும் அவர் இதனை ஒரு தொழிலாகவே செய்கின்றனர் என தெரிவிக்கிறார். இந்தியாவில் இருந்து இப்படி மோசடியாக ஹெச்1பி விசா பெற்று அமெரிக்கா வருபவர்கள் தான் அமெரிக்கர்களின் வேலையையும் எதிர்காலத்தையும் பறிக்கிறார்கள் என்கிறார்.
கடந்த 2024 ஆம் ஆண்டில் அமெரிக்க அரசாங்கம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி பார்க்கும்போது சென்னையில் இருக்கக்கூடிய அமெரிக்க தூதரகம் 2 லட்சத்து 20 ஆயிரம் h1b விசாக்களை பிராசஸ் செய்திருக்கிறது அதேபோல 1 லட்சத்து 40 ஆயிரம் டிபனன்ட் விசா அதாவது H4 விசாக்களை செயலாக்கம் செய்திருக்கிறது . அனைத்து தென் மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு விசா மையமாக சென்னை தூதரகம் தான் செயல்படுகிறது.
இந்திய அமெரிக்கரும், அமெரிக்க தூதரகத்தில் வேலை செய்தவருமான மஹ்வாஷ் சித்திக்கியும் இதே குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட அவர் 2005 மற்றும் 2007 ஆகியவற்றுக்கு இடைபட்ட ஆண்டுகளில் போலியான 51 ,000 விசா விண்ணப்பங்களை தான் நிராகரித்ததாக கூறியுள்ளார். சென்னை தூதரகத்தில் இந்த மோசடி நடக்கிறது என கூறும் அவர் ஐதராபாத்தில் இப்படி மோசடியாக ஹெச்1பி விசா பெற்று தரவே தனியாக நெட்வொர்க்குகளே இருக்கின்றன என்கிறார்.
இந்தியாவில் இருந்து வரகூடிய 80 சதவீத ஹெச்1பி விசா விண்ணப்பங்கள் போலியானவை, போலி டிகிரி மற்றும் போலி ஆவணங்கள் கொண்டு விண்ணப்பம் செய்யப்படுகின்றன என கூறுகிறார். சில விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கூட நேரடியாக கலந்து கொள்ளாமல் மோசடி செய்து இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார். ஒரு இந்திய அமெரிக்கராக இதனை கூற வெட்கப்படுகிறேன் ஆனால் மோசடியும் லஞ்சமும் இந்தியாவில் சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது என கூறுகிறார்.


Click it and Unblock the Notifications