அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு மத்தியில் நவம்பர் 6 அதாவது இன்று புதன்கிழமை காலை வர்த்தகத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றுச் சரிவைத் தொட்டு இறக்குமதியாளர்களையும், பொருளாதார வல்லுனர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சில நாட்களுக்கு முன்பே 84.11 ரூபாய் என்ற பெரும் சரிவைப் பதிவு செய்த ரூபாய் மதிப்பு இன்று கூடுதலாகச் சரிந்துள்ளது.
இன்று காலை நாணய சந்தையில் ஆரம்பக்கட்ட வர்த்தகத்திலேயே டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தடாலடியாக 14 பைசா குறைந்து 84.23 ரூபாய் வரையில் சரிந்து வரலாற்றில் மோசமான நிலையை எட்டியது. இன்று ரூபாய் மதிப்பு சரிவுக்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது அமெரிக்க அதிபர் தேர்தல் என்றால் மிகையில்லை.

அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறுவார் என தெரிவதால், உலகளவில் இருக்கும் டாலர் முதலீடுகள் அமெரிக்கச் சந்தைக்குத் திரும்புவதால் அமெரிக்க டாலர் வலுவடைவது வருகிறது. இதன் எதிரொலியாக இன்று DXY இன்டெக்ஸ் 1.35 சதவீதம் அதிகரித்து டாலர் மதிப்பு 104.81 ஆக உயர்ந்துள்ளது.
டாலர் முதலீடுகள் அமெரிக்காவுக்குத் திரும்ப முக்கியமான காரணம் டிரம்ப் ஆட்சியைப் பிடித்தால் அவருடைய கொள்கை, முடிவுகள், வரி விதிப்பு எப்படி இருக்கும் என தெரியாது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டைப் பாதுகாக்க இந்த முடிவை எடுத்துள்ளனர்.
இதேவேளையில் கமலா ஹாரிஸ் கடந்த 1 மணிநேர வாக்கு எண்ணிக்கையில் பல இடத்தில் வெற்றி பெற்று 200 இடங்களுக்கும் அதிகமான வென்று டிரம்ப்-க்கு டப் பைட் கொடுக்கிறார். இதனால் அமெரிக்க அதிபர் தேர்தலைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மை, அடுத்த துவங்க உள்ள அமெரிக்க பெடரல் ரிசர்வ்-ன் நாணய கொள்கை அறிவிப்பு உள்ளிட்ட பல காரணிகளால் டாலர் மதிப்பு உயர்ந்து ரூபாயின் மதிப்பு சரிவடைந்துள்ளது.
ரூபாய் மதிப்பு சரிந்த போதிலும், இந்தியப் பங்குச் சந்தைகள் நிலையான வர்த்தகத்தைப் பதிவு செய்து வருகிறது. இன்று காலையில் சென்செக்ஸ் 530 புள்ளிகள் வரையில் உயர்ந்து, தற்போது 284.75 புள்ளிகள் உடன் 79,761.38 புள்ளிகளை எட்டியுள்ளது. சென்செக்ஸ் கடந்த 15 நிமிடத்தில் சரிவு பாதையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications