அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் வெளிநாட்டவர்கள் விசா பெற்று அமெரிக்காவிற்கு வந்து படிப்பதையும் வேலை செய்வதையும் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த வண்ணம் இருக்கிறது.
குறிப்பாக ஹெச்1பி விசா, மாணவர் விசாக்களில் வெளிநாட்டவர்கள் அமெரிக்காவுக்கு செல்வது மிக சவாலான ஒன்றாக மாறி இருக்கிறது. அத்தனை எளிதில் விசா அப்பாயிண் மெண்ட் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் ஏதேனும் காரணத்தை கூறி நிராகரித்துவிடுகிறார்கள். தற்போது விசா விண்ணப்பதாரரின் சமூகவலைதள கணக்குகளும் ஆய்வு செய்யப்படுகின்றன.

எனவே அமெரிக்கா விசா பெறுவது மிக கடினமானதாக மாறி இருக்கிறது. இந்த சூழலில் திடீரென இந்தியாவில் செயல்படக்கூடிய அமெரிக்க தூதரகம் மாணவர் விசாவில் அமெரிக்காவிற்கு சென்று இருக்கக்கூடிய இந்தியர்களுக்கு மிகக் கடுமையான ஒரு எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவில் மாணவர் விசாவில் அமெரிக்காவிற்கு சென்று இருப்பவர்கள் அமெரிக்க சட்டங்களை மதிக்கவில்லை என்றால் அவர்களின் விசா ரத்து செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள் எனக் கூறியிருக்கிறது.
அமெரிக்க சட்டங்களை மீறி செயல்படுவது உங்களுடைய மாணவர் விசாவுக்கு தீவிர பின் விளைவுகளை ஏற்படுத்தும். நீங்கள் கைது செய்யப்பட்டாலோ அல்லது சட்டத்தை மீறியதாக கண்டறியப்பட்டாலோ உங்களின் விசா ரத்து செய்யப்படும் நீங்கள் நாடு கடத்தப்படுவீர்கள் எதிர்காலத்தில் உங்களுக்கு அமெரிக்கா செல்வதற்கு விசாவே கிடைக்காது என தெரிவித்திருக்கிறது. சட்டத்தை பின்பற்றி நடங்கள் என தெரிவித்திருக்கும் அமெரிக்க தூதரகம் அமெரிக்கா விசா என்பது ஒரு சலுகை அது ஒரு உரிமை அல்ல என தெரிவித்திருக்கிறது.
இந்திய தூதரகம் திடீரென இப்படி ஒரு எச்சரிக்கை எடுத்திருப்பது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு தான், வேலை சார்ந்த விசாக்களில் அமெரிக்கா சென்று இருப்பவர்கள் குடியுரிமை விதிகளை மீறினால் தீவிரமான குற்றவியல் நடவடிக்கைகளுக்கு ஆளாவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. தற்போது மாணவர் விசாவில் சென்று இருப்பவர்களுக்கும் இது போன்ற ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே அமெரிக்காவில் இருந்து தாயகம் திரும்பிய பலரும் மீண்டும் அமெரிக்கா செல்ல முடியாமல் தவிப்பதாகவும் , விசா ரீ ஸ்டாம்பிங் செய்ய முடியாமலும் சிக்கி இருக்கின்றனர். மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் ஹெச்1பி விசா ஊழியர்கள் வெளிநாடு செல்லாமல் அமெரிக்காவிலேயே இருக்க வேண்டும் அவ்வாறு சென்றால் ஓராண்டு காலம் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும் என கூறி இருக்கின்றன.
ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் மாணவர் விசா மற்றும் வேலை வாய்ப்புக்கான ஹெச்1பி விசா மற்றும் சுற்றுலா விசா என பல்வேறு விசாக்கள் மூலமாக அமெரிக்காவிற்கு செல்கிறார்கள். ஆனால் கடந்த ஓராண்டில் இவை அனைத்து கடுமையானதாகி இருக்கின்றன. இந்தியர்களின் அமெரிக்க கனவு என்பது படிப்படியாக மாயமாகி வருகிறது.


Click it and Unblock the Notifications