பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா ஈரான் மீதான போரை தொடங்கியது. 3 மாத காலம் முடிந்தும் போரும் முடிவுக்கு வரவில்லை கச்சா எண்ணெய் விலையும் குறையவில்லை. ஈரான் போரால் இந்தியாவிற்கு வளைகுடா நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய், எல்பிஜி கேஸ் ஆகியவற்றின் சப்ளை முற்றிலுமாக நின்று போயுள்ளது.
மார்ச் மாதம் முதலே இந்தியாவில் கடுமையான எல்பிஜி தட்டுப்பாடு ஏற்பட்டது. வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டு உணவகங்கள் மூடப்படும் நிலை உண்டானது. வீட்டு எல்பிஜி கேஸ் சிலிண்டர் விநியோகத்திலும் பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. சிலிண்டர் புக்கிங் இடைவெளி அதிகரிப்பு, கேஓய்சி, ஓடிபி என பல மாற்றங்கள் அமலுக்கு வந்துவிட்டன.

இந்தியா வழக்கமாக கத்தார், சவுதி, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் இருந்து தான் எல்பிஜி வாங்கும். போர் காரணமாக எல்பிஜி வரத்து நின்று போனதால், மற்ற நாடுகளிடம் இருந்து எல்பிஜி கேஸ் வாங்குகிறது. இதில் குறிப்பாக இந்தியா அமெரிக்காவிடம் இருந்து அதிகளவில் எல்பிஜி மற்றும் எல்என்ஜி கேஸ் வாங்கி இருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மே மாதத்தில் இந்தியாவின் மிகப்பெரிய எரிவாயு விநியோகஸ்தராக அமெரிக்கா உருவெடுத்துள்ளது. வழக்கமாக இந்தியா எல்.பி.ஜி (LPG - சமையல் எரிவாயு) மற்றும் எல்.என்.ஜி (LNG - திரவ இயற்கை எரிவாயு) ஆகியவற்றை ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், சவுதி அரேபியா போன்ற நாடுகளிடம் இருந்து தான் வாங்கும். ஆனால் கடந்த மே மாதத்தில் அமெரிக்கா இந்தியாவின் முதன்மை எரிவாயு விநியோக நாடாக மாறியுள்ளது.
அமெரிக்காவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்த எல்பிஜி அளவு மே மாதத்தில் 6,29,000 டன்களாக உயர்ந்துள்ளது. இது ஏப்ரல் மாதத்தை விட 63% அதிகம். அதே நேரத்தில் யு.ஏ.இ-யிடமிருந்து எல்பிஜி இறக்குமதி 31% குறைந்துள்ளது, சவுதி அரேபியாவிடம் இருந்து இறக்குமதி 75.5% வரையும் சரிவடைந்துள்ளது.

ஈரான் போருக்கு முன்பு வரை இந்தியா ஈரானிடமிருந்து எல்பிஜி வாங்கியதே இல்லை. ஆனால் தற்போது அங்கிருந்து 1,44,000 டன் எரிவாயு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதே போல அமெரிக்காவிடம் இருந்து இந்தியா வாங்கிய எல்என்ஜி அளவு மே மாதத்தில் 9,07,000 டன்களாக உயர்ந்துள்ளது. இது முந்தைய மாதத்தை விட 227% உயர்வு ஆகும்.
இந்தியாவில் கேஸ் தட்டுப்பாட்டை போக்கவும் வீட்டு உபயோக சிலிண்டர் கிடைப்பதை உறுதி செய்யவும் அரசு அமெரிக்காவிடம் இருந்து அதிகளவு எல்பிஜி, எல் என் ஜி வாங்கி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் எரிவாயுவுக்காக மத்திய கிழக்கு நாடுகளை மட்டும் நம்பியிருக்காமல் அதனை பன்முகப்படுத்த இந்தியா முயற்சி எடுத்த நிலையில் அமெரிக்கா நிறுவனங்கள் இந்தியாவுக்கு கை கொடுத்துள்ளன.
அந்த வகையில் எல்.பி.ஜி மற்றும் எல்.என்.ஜி எரிவாயு வர்த்தகம் அமெரிக்கா - இந்தியா நாடுகளுக்கு இடையேயான அடுத்தகட்ட பொருளாதார உறவை தீர்மானிக்க்கும் சக்தியாக இருக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications

