இந்தியாவின் நம்பர் ஒன் தொழிலதிபராக இருக்கும் கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து குற்ற வழக்குகளையும் அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த அதானி குழுமத்திற்குமே நிம்மதி கிடைத்துள்ளது. டிரம்ப் நிர்வாகம் அதானிக்கு தந்த பரிசாகவே இது பார்க்கப்படுகிறது.
சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களை பெற இந்திய அதிகாரிகளுக்கு தொழிலதிபா் கெளதம் அதானி 265 மில்லியன் டாலா் அதாவது 2,450 கோடி ரூபாய் லஞ்சம் அளித்ததாக, கடந்த 2024-ஆம் ஆண்டு அமெரிக்க நீதித் துறை குற்றஞ்சாட்டியது. இதுதொடா்பாக அமெரிக்காவில் உள்ள நியூயாா்க் நீதிமன்றத்தில் நீதித் துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், விசாரணையும் நடந்தது. ஆனால் அதானி தரப்பு இதனை திட்டவட்டமாக மறுத்தது.

அமெரிக்காவில் தொடரப்பட்ட இந்த வழக்கு கௌதம் அதானிக்கு பெரிய பிரச்சினையை ஏற்படுத்தியது. குறிப்பாக அதானி குழும பங்குகளும் சரிவை கண்டன. இதனிடையே, அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்காற்று ஆணையம் (எஸ்இசி) தொடுத்துள்ள மோசடி வழக்கை தள்ளுபடி செய்யுமாறு அதானி தரப்பில் கடந்த மாதம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கை நடத்துவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தனிப்பட்ட வழக்கறிஞர்களில் ஒருவரும், புகழ்பெற்ற 'சல்லிவன் & கிராம்வெல்' சட்ட நிறுவனத்தின் இணைத் தலைவருமான ராபர்ட் ஜே. ஜியுஃப்ரா ஜூனியர் தலைமையில் புதிய சட்டக் குழுவை சமீபத்தில் அதானி நியமித்திருந்தார். அவர், வழக்கை முன்னெடுத்துச் செல்வதற்கான ஆதாரங்கள் அரசுத் தரப்பிடம் இல்லை எனக் கூறி சில சான்றுகளை சமர்ப்பித்து வாதிட்டார்.
மேலும், அதானி மீதான குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு கைவிட்டால், அமெரிக்காவில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்யவும், 15,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் அதானி தயாராக இருப்பதாகவும் முறையிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததாலும், அமெரிக்காவுடன் நேரடித் தொடர்பு இல்லாததாலும் வழக்கை மேலும் நடத்தப் போவதில்லை என அமெரிக்க அரசு வழக்கறிஞர்களே நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதையடுத்து, இந்த வழக்கை நிரந்தரமாக தள்ளுபடி செய்வதாக அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதானி தரப்பு வக்கீல்கள், இந்த விவகாரம் முற்றிலும் இந்தியாவிற்குள் நடந்தது என்றும், அமெரிக்க சட்டங்கள் இதில் தலையிட முடியாது என்றும் வாதிட்டுள்ளனர். முன்னாள் அதிபர் ஜோ பைடன் காலத்தில் தொடரப்பட்ட வழக்கை டிரம்ப் நிர்வாம் ரத்து செய்துள்ளது. அமெரிக்க நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மூலம் அதானி குழுமத்திற்கு சர்வதேச அளவில் இருந்த தடைகள் நீங்கியுள்ளன.
ஏற்கனவே புதுப்பிக்க தக்க எரிசக்தி, டேட்டா செண்டர், விமான நிலையம், துறைமுகம் என பல துறைகளிலும் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் கௌதம் அதானிக்கு இந்த வழக்கு ரத்து குட் நியூஸாக வந்துள்ளது.


Click it and Unblock the Notifications

