அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ், தனது 2 நாள் நாணய கொள்கை கூட்டம் முடித்த பின்பு வியாழக்கிழமை காலையில் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை வெளியிட்டார் FED தலைவர் ஜெரோம் பவல். நாணய கொள்கை குழுவில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களும் ஒப்புதலின் பேரில் அந்நாட்டின் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 0.25% குறைத்துள்ளது.
இது அமெரிக்க பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான விஷயமாக மாறியுள்ளது, இந்த அறிவிப்பால் பத்திர சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேறலாம், குறிப்பாக பங்குச்சந்தையிலும், தங்கத்திலும் முதலீட்டை அதிகரிக்கலாம். ஆனால் டிரம்ப் அதிபராகும் வேளையில் டாலர் மதிப்பின் அதிகரிப்பால் நிலைமை மாறலாம்.

பெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டியானது, கடந்த முறை 50 சதவீதம் வரையில் வட்டியை குறைத்த நிலையில், தற்போது 0.25 சதவீதம் வட்டி விகிதத்தைக் குறைத்து பென்ச்மார்க் வட்டியை 4.50% முதல் 4.75% வரை குறைத்துள்ளது. இதன் மூலம், அந்நாட்டில் தனிநபர் முதல் கார்ப்ரேட் வரையிலான கடன் விகிதங்கள் குறைந்து, முதலீட்டை ஊக்குவித்து, பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.
ஐரோப்பா, பிரிட்டன், அமெரிக்கா போன்ற பெரும் பொருளாதாரம் சக்தி கொண்ட நாடுகள் கடந்த 3 மாதத்தில் அடுத்தடுத்து 2 முறை வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. ஆனால் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தைக் குறைக்க மறுக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் ரீடைல் பணவீக்கம்.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் இந்த நாணய கொள்கை கூட்டத்தின் அறிக்கையில், அந்நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் வலுவாக உள்ளதை ஒப்புக் கொண்டாலும், வேலைவாய்ப்பு சந்தையில் சமீபத்திய போக்குகள் குறித்து அச்சம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், பணவீக்கம் தொடர்ந்து குறைந்து வருவதாக பெடரல் ரிசர்வ் தெரிவித்துள்ளது. ஆனால், இன்னும் 2% இலக்கை விட அதிகமாகவே உள்ளது என்பதையும் விளக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications