ஈரான் நாட்டின் மிக முக்கியமான ஒரு துறைமுகமாக சாபஹார் துறைமுகம் இருக்கிறது. ஈரான் நாட்டில் இருக்கக்கூடிய துறைமுகங்களிலேயே இது மிகப்பெரியது . இந்திய பெருங்கடல் பகுதிக்கு நேரடி அணுகலை கொண்ட ஒரு துறைமுகமாகவும் திகழ்கிறது.
இந்தியா தன்னுடைய கடல் சார்ந்த வணிகத்தை வலுப்படுத்த இந்த துறைமுகத்தை பயன்படுத்துகிறது. பல்வேறு நாடுகளுக்கான ஒரு வர்த்தக போக்குவரத்தை ஏற்படுத்தி தரக்கூடிய ஒரு துறைமுகமாக சாபஹார் துறைமுகம் தொடர்ந்து நீடிக்கிறது. இந்தியா ,ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளை இணைக்கக்கூடிய ஒரு சர்வதேச வழிதடத்திலும் இந்த துறைமுகம் அமைந்திருப்பதால் இந்தியாவிற்கு இது மிக முக்கியமான ஒரு துறைமுகமாக திகழ்கிறது.

குறிப்பாக ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு மனிதநேய ரீதியான உதவிகளை வழங்குவதற்கு இந்த துறைமுகத்தை இந்தியா பயன்படுத்துகிறது . இந்நிலையில் தான் 2024 ஆம் ஆண்டில் சாபஹார் துறைமுகத்தை இயக்குவது தொடர்பாக இந்தியா ஈரானுடன் பத்து ஆண்டுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதனை அடுத்து சாபஹார் துறைமுகத்தில் பல்வேறு கட்டுமான பணிகளையும் மேம்பாட்டு பணிகளையும் இந்தியா பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செலவு செய்து உருவாக்கியிருக்கிறது.
இந்த நிலையில் தான் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் சில மாதங்களுக்கு முன்னர் கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த மோதலைத் தொடர்ந்து சாபஹார் துறைமுக மேம்பாடு மற்றும் செயல்பாடுகளுக்கு அமெரிக்கா தடை விதிக்கலாம் மற்றும் இந்தியாவுக்கு தொந்தரவு தரலாம் என சொல்லப்பட்டது.
ஏனெனில் சாபஹார் துறைமுகம் வழியாக இந்தியா உடனான கடல் வழி வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு ரஷ்யாவும் ஒரு புறம் திட்டமிட்டு இருக்கிறது . இந்த சூழலில் தான் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக சாபஹார் துறைமுக பயன்பாடுக்கு அமெரிக்கா தடை விதிப்பதாக சொல்லப்பட்டது . இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் உடனடியாக அமெரிக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதற்கு சலுகையை பெற்றது.
இந்த சூழலில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சாபஹார் துறைமுக திட்டத்திற்கு இந்தியாவுக்கு அளிக்கப்பட்ட சலுகையை மேலும் ஆறு மாதத்திற்கு தொடர அமெரிக்க அனுமதி அளித்துள்ளது என கூறியுள்ளது. மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இந்த தகவலி வெளியிட்டுள்ளார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேம்பட்டு இருப்பதையே காட்டுகிறது என்றும் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் தற்போது தீவிரமாக உறுதிப்பூண்டு உள்ளோம் என்றும் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications