அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பு ஏற்ற நாளில் இருந்து குடியேற்ற விதிகளை தொடர்ந்து கடுமையாக்கி வெளிநாட்டவர்களுக்கு கடுமையான சூழ்நிலையை உருவாக்கி வருகிறார். ஹெச்1பி விசா பெறுவதில் சம்பள கட்டுப்பாட்டில் துவங்கி அமெரிக்காவில் வெளிநாட்டவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தானா கிடைக்கும் குடியுரிமையை ரத்து செய்வது வரையில் பல கட்டுப்பாடுகளையும், நெருக்கடிகளையும் உருவாக்கி வருகிறது டிரம்ப் அரசு.
இதில் பல கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த கூடாது என்பதை அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டாலும், டிரம்ப் அரசு தொடர்ந்து விசா வழங்குவதிலும், கிரீன் கார்டு வழங்குவதிலும் கடுமையான போக்கை கடைபிடித்து வருகிறது.

இதனால் அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்கள் குறிப்பாக விசாவில் பணியாற்றும் என்ஆர்ஐ ஊழியர்களுக்கு கடுமையான சூழ்நிலை தொடர்ந்து நிலவுகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் USCIS அமைப்பு வெளியிட்டுள்ள தகவல் படி EB-1A வழியாக அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை வழங்கும் பிரிவின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் 35 சதவீதம் வரையில் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.
2025ஆம் நிதியாண்டின் தரவுகளில் இந்தியர்கள் சுமார் 14250 EB-1A வழியாக கிரீன் கார்டு பெறுவதற்காக விண்ணப்பம் செய்துள்ளனர். இதில் 6993 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது மூலம் approval rate 49.07% ஆக உள்ளது.
இதேபோல் கிரீன் கார்டு கொடுக்க முடியாது என நிராகரிக்கப்பட்ட விண்ணப்பத்தின் எண்ணிக்கை 1,474 ஆக உள்ளது. இதன் மூலம் Rejection Rate 10.34 சதவீதமாக உள்ளது.
இதுவே 2026ஆம் நிதியாண்டின் முதல் 2 காலாண்டு தரவுகளை பார்க்கும் போது இக்காலக்கட்டத்தில் 7316 பேர் EB-1A வழியாக கிரீன் கார்டு பெறுவதற்காக விண்ணப்பம் செய்துள்ளனர். இதில் 2571 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது மூலம் approval rate 35.14% ஆக குறைந்துள்ளது.
இதேபோல் கிரீன் கார்டு கொடுக்க முடியாது என நிராகரிக்கப்பட்ட விண்ணப்பத்தின் எண்ணிக்கை 1,131 ஆக உள்ளது. இதன் மூலம் Rejection Rate 15.46 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதில் அச்சம் அடையக்கூடும் விஷயம் என்னவென்றால் approval rate 49.07% இருந்து 35.14% ஆக குறைந்துள்ளது. கிட்டத்தட்ட 13.93 சதவீதம் குறைந்துள்ளது. கிட்டதட்ட 1000 பேர் கிரீன் கார்டு பெற முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அமெரிக்காவில் அறிவியல், கலை, கல்வி, வணிகம் அல்லது விளையாட்டுத் துறைகளில் தனித்திறன், அசாதாரணமான திறன் கொண்டவர்கள் மட்டுமே கிரீன் கார்டு பெற பயன்படுத்தும் வழிதான் இந்த EB-1A விசா. இதை அதிகம் பயன்படுத்துவது இந்தியர்கள் தான்.
இதற்கு முக்கிய காரணம் இந்த EB-1A வழியாக கிரீன் கார்டு பெற அமெரிக்க நிறுவன ஸ்பான்சர் செய்ய வேண்டிய கட்டாயமோ, அல்லது வேலை வாய்ப்புச் சான்றிதழோ (PERM) தேவையில்லை.
அந்நாட்டில் பணியில் குறிப்பாக STEM பிரிவில் பணியாற்றும் மக்கள் நேரடியாகத் கிரீன் கார்டுக்காக விண்ணப்பம் தாக்கல் செய்யலாம். இதை பெரும்பாலும் இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தம் வழியாக இருக்கும் காரணத்தால் தற்போது பாதிப்பும் இந்தியர்களுக்கு அதிகமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications

