பிப்ரவரி 28ஆம் தேதி திடீரென அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுத்தன. ஆறு வார காலமாக நீடித்த இந்த போர் கடந்த வாரத்தில் இருந்து சற்று அமைதிக்கு வந்திருக்கிறது. அமெரிக்காவும் ஈரானும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக ஏப்ரல் 21ஆம் தேதி வரை எந்த ஒரு தாக்குதலும் நடத்தப்படாது என இருதரப்பும் போர் நிறுத்தத்தை அமல்படுத்தியுள்ளன.
அமைதி பேச்சுவார்த்தைகள் நடந்தாலும் அமெரிக்காவும் ஈரானும் தொடர்ந்து வார்த்தை மோதல்களிலும் ஈடுபட்டு வருகின்றன. டிரம்ப் ஈரானை மிரட்டுவதும் பதிலுக்கு ஈரான் டிரம்பை கேலி செய்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இதற்கிடையே கடந்த வாரம் சனிக்கிழமை முதல் கட்டமாக பாகிஸ்தானில் நடத்தப்பட்ட அமைதி பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்த சூழலில் விரைவில் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட இருக்கிறது. வரும் செவ்வாய்க்கிழமைக்குள் அதாவது ஏப்ரல் 21 வரை தான் போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் மீண்டும் தாக்குதல்கள் தொடங்கும். ஈரான் போர் மீண்டும் தொடங்குவது உலக சந்தையில் மேலும் கச்சா எண்ணெய் விலைகளை உயர்த்தும். இதனால் பல்வேறு நாடுகளிலும் எரிபொருள் தட்டுப்பாடு தீவிரமடையும்.
இந்த சூழலில் தான் போர் நிறுத்த ஒப்பந்தம் மேலும் நீட்டிக்கப்படுமா என்ற கேள்விக்கு அமெரிக்க அரசு பதில் அளித்து இருக்கிறது. அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் கரோலின் லிவிட் தற்போது ஈரான் உடன் பேச்சு வார்த்தை ஆக்கப்பூர்வமாக சென்று வருவதாக தெரிவித்து இருக்கிறார். இருந்தாலும் அமெரிக்கா தரப்பு இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிக்காது என்றும் அவர் திட்ட வட்டமாக கூறியிருக்கிறார்.
ஈரான் அமைதி பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக சென்று வருகிறது, முக்கியமான விஷயங்களில் முன்னேற்றம் கிடைத்துள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார். அமெரிக்கா தரப்பு போர் நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாக வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை என்றும் குறிப்பிட்ட அவர் இந்த போர் நிறுத்தம் நீட்டிக்கப்படாது என்றும் கூறியிருக்கிறார்.
இதற்கிடையே இந்த இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையிலேயே அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஒரு குறிப்பிட்ட தகுந்த முன்னேற்றம் ஏற்பட்டுவிடும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிப்பதாக ஆக்ஸியோ தளம் வெளியிட்டுள்ள செய்தி கூறுகிறது. ஹார்முஸ் ஜலசந்தி போன்ற குறிப்பிட்ட சில முக்கியமான விஷயங்களில் உடன்பாடு ஏற்படும் என அதிகாரிகள் தரப்பில் நம்பிக்கை தெரிவித்து இருப்பதாகவும் அந்த செய்தி குறிப்பிடுகிறது.


Click it and Unblock the Notifications