சர்வதேச அளவில் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை பணி நீக்கம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன. அந்த வகையில் அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு செயல்படக்கூடிய ஐடி நிறுவனமான இன்டுயிட் (Intuit) தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 1800 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சாசன் கூட்டார்ஸி ஊழியர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் மொத்த ஊழியர்களில் 10 % ஊழியர்களை பணியில் இருந்து நீக்கப்போவதாக தெரிவித்துள்ளார். சிக்கன நடவடிக்கை காரணமாக ஊழியர்களை பணி நீக்கம் செய்யவில்லை என கூறியுள்ள அவர் இதே அளவில் புதிதாக ஊழியர்களை பணி நியமனம் செய்யப் போவதாகவும், இவர்கள் பெரும்பாலும் பொறியியல் மற்றும் விற்பனை பிரிவுகளில் பணிக்கு அமர்த்தப்படுவர் என்றும் தெரிவித்துள்ளார்.

வேலையில் இருந்து நீக்கப்படக்கூடிய ஊழியர்களில் சுமார் 1000 பேர் நிறுவன எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றபடி வேலை செய்யவில்லை எனக் கூறியுள்ளார். மேலும் நிறுவனத்தில் இருக்கக்கூடிய தலைமை அதிகாரிகளின் எண்ணிக்கையிலும் 10 சதவீதத்தை குறைக்க போவதாக அவர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இந்த நிறுவனத்திற்கு சொந்தமாக எட்மாண்டன் மற்றும் பாய்ஸ் ஆகிய பகுதிகளில் உள்ள அலுவலகங்களை மூட இருப்பதாக தெரிவித்துள்ளார்.
1800 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதன் மூலம் நிறுவனத்திற்கு கூடுதலாக 250 மில்லியன் டாலர்கள் செலவாகும் என அவர் கூறியுள்ளார். தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் செயற்கை நுண்ணறிவு புரட்சி ஏற்பட்டுள்ளது என ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு ஏற்ற வகையில் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் உண்டாகியுள்ளது என கூறியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகின் ஒவ்வொரு துறையிலும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது, சில ஆண்டுகளுக்கு முன்பு நாம் நினைத்துப் பார்க்க முடியாத பல விஷயங்களை தற்போது செயற்கை நுண்ணறிவு செய்து கொண்டிருக்கிறது. எனவே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயன்படுத்த தயாராகவில்லை என்றால் நமது நிறுவனம் வீழ்ச்சி அடையும் எனக் கூறியுள்ளார்.
கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக நமது நிறுவனம் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது எனவே இதனை நீட்டிக்க தற்போது செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில் நுட்பங்களில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறோம் எனக் கூறியுள்ளார். இது ஏஐ புரட்சியின் ஒரு தொடக்கம் தான் என்றும் வரும் காலங்களில் பெரிய பெரிய மாற்றங்களை நாம் காண இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications