பிப்ரவரி 28ஆம் தேதி முதல் உலகமே அதிகமாக பேசியது ஈரான் போர் பற்றி தான். ஈரான் போர் அந்த ஒரு நாட்டில் மட்டுமில்லாமல் பெரும்பாலான் ஆசிய நாடுகளிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் போரின் வலிகளை ஒவ்வொரு நாளும் பெட்ரோ, டீசல் விலை உயர்வு, கேஸ் விலை உயர்வு என நாம் அனுபவித்து வருகிறோம். எப்போது தான் போர் முடிவுக்கு வந்து இயல்பு நிலை திரும்பும் என அனைவரும் எதிர்ப்பார்க்கும் சூழலில் மீண்டும் ஒரு முறை அமெரிக்கா தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது. ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்காவின் அப்பாச்சி ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து, ஈரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் ஏற்கனவே நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை மேலும் அதிகரித்துள்ளது.

ஹார்முஸ் நீரிணையில் பறந்து கொண்டிருந்த அமெரிக்க ராணுவத்தின் அப்பாச்சி ஹெலிகாப்டரை ஈரான் சுட்டு வீழ்த்தியது. இதற்கு பதிலடியாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவின் பேரில், அமெரிக்கப் படைகள் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன. இந்தத் தாக்குதல் குறித்துப் பேசிய அதிபர் டிரம்ப், "ஈரானின் நியாயமற்ற ஆக்கிரமிப்புக்கு இந்தத் தாக்குதல் ஒரு மிக வலுவான மற்றும் சக்திவாய்ந்த பதிலடி" என கூறினார்.
ஹார்முஸ் நீரிணையில் உள்ள ஈரானின் கெஷ்ம் தீவு மற்றும் சிரிக் துறைமுக நகரம் ஆகிய இடங்களில் அமெரிக்காவின் ஏவுகணைகள் தாக்கியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. மேலும், பந்தர் அப்பாஸ் மற்றும் ஜாஸ்க் ஆகிய பகுதிகளுக்கு அருகிலும் குண்டு வெடிப்பு சத்தம் கேட்டதாம். ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ரேடார் தளங்களை குறி வைத்து அமெரிக்கா இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தனது எக்ஸ் தளத்தில், எந்தவொரு தாக்குதலோ அல்லது அச்சுறுத்தலோ பதிலடி கொடுக்கப்படாமல் விடப்படாது என கடுமையாக எச்சரித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஒரு தற்காலிக போர்நிறுத்தம் அமலில் இருந்தது. இரு நாடுகளும் ஒரு நிரந்தர அமைதி ஒப்பந்தத்தை நோக்கி நகர்ந்து வந்தன. ஆனால், தற்போதைய ஹெலிகாப்டர் தாக்குதலும் அமெரிக்காவின் பதில் தாக்குதல்களும் இந்த அமைதிப் பேச்சுவார்த்தையை மேலும் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.


Click it and Unblock the Notifications

