இந்திய மாணவர்கள் பலர், உள்நாட்டில் ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்காதபோது, வெளிநாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில் முதுகலைப் படிப்பைத் தொடர்வது வழக்கம். கூகுள், அமேசான் போன்ற பெரிய பன்னாட்டு நிறுவனங்களில் வேலை கிடைத்து, அங்கேயே செட்டில் ஆகிவிடலாம் என்ற கனவுடன் செல்லும் இவர்களுக்கு, சில சமயங்களில் நிஜ வாழ்க்கை மிக கடுமையான பாடத்தை கற்றுக் கொடுக்கிறது. அப்படி ஒரு கசப்பான அனுபவத்தை எதிர்கொண்ட தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர், தனது கதையை ரெடிட் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
வேலை கிடைக்காமல் இந்தியா திரும்பிய அவலம் : அமெரிக்காவில் முதுகலைப் படிப்பை வெற்றிகரமாக முடித்த பின்னரும், அவருக்கு எதிர்பார்த்தபடி வேலை கிடைக்கவில்லை. வேறு வழியின்றி இந்தியாவுக்கு திரும்பிய அந்த இளைஞர், வேலை கிடைக்காத விரக்தியாலும், இனி வேலையில்லாமல் இருக்கக்கூடாது என்ற மன அழுத்தத்தாலும், ஐரோப்பிய நிதித் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆண்டுக்கு வெறும் ரூ. 2 லட்சம் என்ற மிக குறைந்த சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்ததாக கூறியுள்ளார்.

அவருடைய வேலை, நவீன தொழில்நுட்பங்களுடன் இல்லாமல், பழைய பாணியிலான 'Struts' என்ற கட்டமைப்பைக் கொண்ட 'ஃபுல்-ஸ்டேக் டெவலப்மென்ட்' பணியாகும். இந்தச் சூழலில், வேறு எந்த வேலையும் கையில் இல்லாவிட்டாலும், அவர் சமீபத்தில் அந்த வேலையை ராஜினாமா செய்ய முடிவெடுத்துவிட்டார். வேறு வாய்ப்புகள் எதுவும் இல்லாவிட்டாலும், நான் இந்த வாரம் ராஜினாமா செய்துவிட்டேன். 3 மாத நோட்டீஸ் காலத்தில் தீவிரமாக வேலை தேடப் போகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இளைஞர் ராஜினாமா முடிவை எடுத்ததற்குக் குறைந்த சம்பளமே முக்கிய காரணம். சென்னை, பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் சம்பளத்தில் வாழ்வது, சேமிப்பு இன்றி ஒரு போராட்டமாக இருந்தது என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
"நான் பெரிய நகரத்தில் இருக்கிறேன். என் சம்பளத்தின் பெரும் பகுதி, அலுவலகத்திற்குச் சென்று வர ஆகும் பயணச் செலவிற்கே சரியாகி விடுகிறது. மீதி பணம் வாடகை, மாதாந்திர பில்கள் மற்றும் எப்போதாவது வெளியே சாப்பிடுவது என்று செலவாகிறது. இதனால், மாத இறுதியில் என் கையில் சில நூறு ரூபாய்கள் கூட மிஞ்சுவதில்லை. சில மாதங்களில் ஒன்றுமே மிஞ்சுவதில்லை" என்று வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும், அலுவலகத்திற்குச் சென்று வர தினமும் 3 மணி நேரம் வீணாவது பெரும் சோர்வை ஏற்படுத்தியதாகவும், சக ஊழியர்களின் அணுகுமுறையும், தாம் பணியாற்றிய திட்டத்தின் எதிர்காலம் நம்பிக்கை இல்லாததாக இருந்ததும் ராஜினாமாவுக்கு மற்ற காரணங்கள் என்று அந்த இளைஞர் கூறியுள்ளார்.
தற்போது நோட்டீஸ் காலத்தில் இருக்கும் இந்த இளைஞர், தனது திறன்களை வளர்த்துக் கொண்டு, நேர்காணல்களுக்கு தீவிரமாக தயாராகி வருகிறார். "எனக்கு 'Data Structures and Algorithms' மற்றும் 'System Design' அடிப்படைகள் நன்றாகத் தெரியும்" என்று கூறுகிறார்.
இருப்பினும், இந்தச் சவாலான வேலை சந்தையில் தாம் எடுத்த முடிவு குறித்து அவருக்கு சந்தேகம் உள்ளது. "வேலை கையில் இல்லாத நிலையில் நான் ராஜினாமா செய்தது சரியான முடிவா? தற்போதுள்ள சந்தையில் நான் கேட்கும் ரூ.8 லட்சம் முதல் ரூ.9 லட்சம் ஆண்டுச் சம்பளம் எனக்குக் கிடைக்குமா?" என்று அவர் சமூக வலைதளத்தில் ஆலோசனை கேட்டுள்ளார். அமெரிக்கப் பட்டம் பெற்ற இளைஞரின் இந்த நிலை, இந்திய தொழில்நுட்ப துறையின் வேலைவாய்ப்பு சந்தை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications