அமெரிக்க அரசு இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தற்போது 50 சதவீத வரிவிதிப்பை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. இந்த 50 சதவீத வரி விதிப்பு என்பது இந்தியாவை சேர்ந்த 50 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஏற்றுமதி துறைக்கே பெரிய பிரச்சினையை உண்டாக்கி இருக்கிறது.
தற்போது இந்தியாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அமெரிக்காவை சேர்ந்த வர்த்தகத் துறை அதிகாரிகள் இந்தியாவிற்கு வருகை தந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். கூடிய விரைவில் இந்திய அதிகாரிகள் அமெரிக்காவிற்கு சென்று வர்த்தக பேச்சுவார்த்தையில் ஈடுபட இருக்கின்றனர். இது குறித்து ஒரு பாசிட்டிவான தகவலை தலைமை பொருளாதார ஆலோசகரான அனந்த நாகேஸ்வரன் பகிர்ந்திருக்கிறார்.

கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் தனிப்பட்ட முறையில் நான் உறுதியாக கூறுகிறேன் அடுத்த இரண்டு மாதங்களில் அல்லது அதற்கு முன்னதாகவே கூட , ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு இந்தியா மீது விதிக்கப்பட்ட அந்த கூடுதல் 25 சதவீத வரி நீக்கப்பட்டு விடும் எனக் கூறியிருக்கிறார் . மேலும் இந்தியா மீது ஏற்கனவே விதிக்கப்பட்ட 25% வரியும் 10 அல்லது 15 சதவீதமாக குறைக்கப்படும் என்ற நம்பிக்கை எழுந்திருப்பதாக அவர் சுட்டிக் காட்டுகிறார் .
முதலில் அமெரிக்க அரசு இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்தது, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக கூடுதலாக 25 சதவீத வரி என மொத்தம் 50 சதவீத வரியை விதித்தது. இதனால் இருநாட்டு உறவில் விரிசல் எழுந்த நிலையில் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே இந்த வரி தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்த பேச்சு வார்த்தையை சுட்டிக்காட்டி நாகேஸ்வரன் இவ்வாறு தெரிவித்திருக்கிறார் . அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு நடவடிக்கையால் ஜவுளி ,ரசாயனம் ,கடல் உணவுகள் ,நகைகள் மற்றும் நவரத்தினங்கள் , இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த தொழில்கள் பெரும் பாதிப்பை சந்தித்து இருக்கின்றன .ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி என்பது பத்து மாதங்களில் இல்லாத சரிவை கண்டு வெறும் 6.87 பில்லியன் டாலர்களாக இருக்கிறது .
இந்தியாவின் மிகப்பெரிய ஒரு ஏற்றுமதி சந்தையாக அமெரிக்கா தொடர்ந்து திகழ்கிறது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் 20% பொருட்கள் அமெரிக்க சந்தையை நோக்கி தான் செல்கின்றன. 2024- 25 ஆம் நிதி ஆண்டில் இந்தியா 86.5 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொருட்களை அமெரிக்க சந்தைக்கு ஏற்றுமதி செய்திருக்கிறது. இரு தரப்புக்கு இடையே ஏற்படும் வர்த்தக ஒப்பந்தம் என்பது இந்தியாவிற்கும் ஏற்றுமதி தொழிலை சார்ந்திருப்பவர்களுக்கும் பெரிய நிம்மதியை தரும்.


Click it and Unblock the Notifications