அமெரிக்காவில் டிரம்ப் தலைமையிலான அரசு ஹெச்1பி விசாவில் அடுத்தடுத்த கட்டுப்பாடுகளை கொண்டு வந்து இந்திய ஐடி ஊழியர்களை கலங்கடித்து வருகிறது. தற்போது அமெரிக்கா செல்ல ஹெச்1பி விசா கிடைப்பதே குதிரை கொம்பாகி போன நிலையில் ஏற்கனவே இந்த விசாவில் அமெரிக்காவில் தங்கி இருக்கும் டெக்கிகளுக்கு சிக்கலை ஏற்படுத்த டிரம்ப் நிர்வாகம் தயாராகி வருகிறது.
அமெரிக்க டெக் நிறுவனங்கள் திறன் மிகு வெளிநாட்டு ஊழியர்களை பணியில் அமர்த்த ஹெச்1பி விசாவை தான் பயன்படுத்துகின்றன. அந்த வகையில் இந்த விசாவை 70% பயன்படுத்துவது இந்திய ஐடி ஊழியர்கள் தான். இதனால் ஹெச்1பி விசாவில் கொண்டு வரப்படும் எந்த ஒரு மாற்றமும் இந்திய டெக்கிகளை பாதிக்கிறது.

தற்போது ஹெச்1பி விசாவில் அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு, குறிப்பாக இந்தியர்களுக்கு, ஒரு முக்கிய பாதுகாப்பு வளையமாக இருந்த 60 நாள் வேலை தேடும் அவகாசம் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க உள்துறை பாதுகாப்பு அமைச்சகம் தற்போதைய விசா விதிமுறைகளில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டுவருவது குறித்து ஆலோசித்து வருகிறது. இதன்படி, பணி நீக்கம் செய்யப்படும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் 60 நாள் அவகாசத்தை முற்றிலும் ரத்து செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவு தற்போது நிர்வாகம் மற்றும் பட்ஜெட் அலுவலகத்தின் பரிசீலனையில் உள்ளது. இது இன்னும் சட்டமாக மாறவில்லை.
தற்போதுள்ள விதிகளின்படி, ஹெச்1பி விசா வைத்திருப்பவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டால், அவர்கள் அமெரிக்காவை விட்டு உடனடியாக வெளியேற வேண்டியதில்லை. அவர்களுக்கு 60 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் அவர்கள், புதிய வேலை தேடலாம், வேலை மாறியதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கலாம் அல்லது சட்டப்பூர்வமாக நாட்டை விட்டு வெளியேறுவதற்கான ஏற்பாடுகளை செய்துகொள்ளலாம்.
ஒருவேளை இந்த புதிய மாற்றம் வந்துவிட்டால் ஹெச்1பி விசா வைத்திருப்பவருக்கு வேலை பறிபோனாலே உடனே நாட்டை விட்டு வெளியேற வேண்டி இருக்கும். இந்த மாற்றம் ஹெச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டும் சிக்கலை ஏற்படுத்தாது. E-1, E-2, E-3, H-1B1, L-1, O-1 விசா வைத்திருப்பவர்கள் மற்றும் அவர்களை சார்ந்திருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.
அமெரிக்க தொழில்நுட்ப துறையில் திடீர் ஆட்குறைப்பு ஏற்படும் போது, புதிய வேலை தேடுவதற்கு தேவையான கால அவகாசத்தை இந்த 60 நாட்கள் வழங்குகின்றன. இந்த அவகாசம் இல்லையென்றால், வேலை இழந்த அடுத்த நொடியே அமெரிக்க கனவு சிதைந்துவிடும் அபாயம் ஏற்படும். அமெரிக்காவில் நீண்ட காலமாக பணிபுரிந்து, அங்கு வீடு, குழந்தைகளின் கல்வி மற்றும் இதர நிதி சுமைகளைக் கொண்ட இந்தியர்களுக்கு, உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற நெருக்கடி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்த 60 நாட்கள் அவகாசம் இல்லையென்றால், சட்டப்பூர்வமாக அமெரிக்காவிற்குள் வேலை தேடுவதோ அல்லது விசா நிலையை மாற்றுவதோ மிகவும் கடினமாகிவிடும். இந்த மாற்றம் குறித்த தொடக்க நிலை ஆலோசனை தான் நடந்து வருகிறது. விரைவில் இதன் மீது பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்படும். மக்களின் கருத்துகளை ஆய்வு செய்த பின்னரே இறுதி விதிமுறை அமல்படுத்தப்படும்.


Click it and Unblock the Notifications

