அமெரிக்கா மொத்தமும் மிட்டேர்ம் தேர்தல் பரபரப்பில் இருக்கும் வேளையில் நியூயார்க் டைம்ஸ் மற்றும் சீய்னா-வின் கருத்துக்கணிப்புகள், டொனால்டு டிரம்புக்கும், அவருடைய குடியரசுக் கட்சி அதாவது Republican Party-க்கு ஒரு முக்கியமான எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
இந்த மிட்டேர்ம் தேர்தல் செனட் சபையைக் கைப்பற்றுவது மிகவும் டிரம்ப் அரசுக்கு மிகவும் முக்கியமானது, காரணம் செனட் சபையைக் குடியரசுக் கட்சி கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டுமே அதிகாரம் டிரம்ப் கையில் இருக்கும், தன்னிச்சையாகச் செயல்படும் அதிகாரத்தைக் கொடுக்கும்.

ஆனால் செனட் தேர்தலில் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் 7 மாநிலங்களில் ஜனநாயக கட்சி அதாவது முன்பு ஆட்சியில் இருந்த Democratic Party வேட்பாளர்கள் முன்னிலையில் இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் மற்றும் சீய்னா-வின் கருத்துக்கணிப்புகள் கூறுகிறது.
செனட் சபையில் டிரம்ப் தலைமையிலான குடியரசு கட்சி தனது பெரும்பான்மையை இழக்கும் பட்சத்தில், டிரம்ப் அரசின் ஒவ்வொரு சட்ட முடிவுகளுக்கும், நியமனங்களுக்கும், நிதி ஒதுக்கீடுகளுக்கும், கொள்கை முடிவுகளுக்கும் ஜனநாயகக் கட்சியின் ஒப்புதல் கட்டாயமாகும்.
ஜனநாயகக் கட்சியின் தயவு இல்லாமல் தன்னிச்சையாக முடிவுகளை டிரம்ப் அரசால் எடுக்க முடியாது, இதில் ஈரான் போர் முதல் ஹெச்1பி விசா கட்டுப்பாடுகள் வரையில் அனைத்தும் அடங்கும் என்பதால் இந்த மிட்டேர்ம் தேர்தல் முடிவுகள் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செனட் தேர்தலில் வெற்றி மற்றும் தோல்வியைத் தீர்மானிக்கும் 7 முக்கிய மாநிலங்களில் மிச்சிகள், டெக்சாஸ், மெய்ன் ஆகிய மாநிலங்களில் ஜனநாயக கட்சி வேட்பாளர்களுக்கு 51 சதவீதத்திற்கும் அதிகமான ஆதரவு உள்ளது.
இதேபோல் அயோவா, அலாஸ்கா, கன்சாஸ், ஓஹியோ ஆகிய 4 மாநிலங்களில் 48- 49 சதவீத ஆதிக்கத்தில் ஜனநாயக கட்சியினர் உள்ளனர். மேலும் இந்த 7 மாநிலத்திலும் டிரம்ப்-ன் குடியரசு கட்சி வேட்பாளர்கள் 42 - 47 சதவீதம் வரையிலான ஆதிக்கத்தில் 2வது இடத்தில் உள்ளனர் என நியூயார்க் டைம்ஸ் மற்றும் சீய்னா-வின் கருத்துக்கணிப்புகள் கூறுகிறது.
இந்த கருத்துக்கணிப்பின் படி நடக்குமாயின், இந்த மிட்டேர்ம் தேர்தலில் மிக முக்கியமாக டெக்சாஸ் மாநிலத்தில் 1988க்கு பின்பு முதல் முறையாக ஜனநாயகக் கட்சி செனட் தேர்தலில் வெற்றி பெறப் போகிறது. இதோடு கன்சாஸ் மாநிலத்தில் 1932ஆம் ஆண்டுக்குப் பின் ஜனநாயகக் கட்சி செனட் தேர்தலில் வெற்றி பெறவில்லை, தற்போது முன்னிலையில் உள்ளது.
இவை இரண்டும் அமெரிக்க அரசியல் வரலாற்றில் புதிய திருப்பமாக இருக்கப்போகிறது.
இதேபோல் டிரம்ப்-ன் பெரும் தோல்வியாகவும், பலவீனமாகவும் இவ்விரு மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குடியரசு கட்சிகள் ஆதிக்கம் நிறைந்த டெக்சாஸ் மற்றும் கன்சாஸ் மாநிலத்தில் ஜனநாயக கட்சி ஆதிக்கம் பெறுவது மூலம் டிரம்ப் தனது செல்வாக்கை அந்நாட்டு மக்களிடம் இழந்து வருகிறார் என்பதை காட்டுகிறது. மேலும், இந்த 7 மாநிலங்களிலும் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றால், டிரம்ப் ஆட்சிக்கும், அதிகாரத்திற்கும் உண்மையிலேயே வேட்டு தான்.
மிட்டேர்ம் தேர்தல் முழு விளக்கம்:
மிட்டேர்ம் தேர்தல் என்பது அமெரிக்க அதிபரின் 4 ஆண்டு ஆட்சி காலத்தில் சரியாக நடுப்பகுதியில் நடக்கும். இத்தேர்தல் வருகிற நவம்பர் 3ஆம் தேதி நடக்க உள்ளது.
அமெரிக்காவின் மிட்டேர்ம் தேர்தலை எளிதாக புரிந்துகொள்ள, இந்தியாவுடன் ஒரு சிறிய ஒப்பீடு. இந்தியாவில் எப்படி லோக் சபா, ராஜிய சபா என இரு அவைகள் நாடாளுமன்றத்தில் இருக்கிறதோ.. அதேபோல் அமெரிக்க நாடாளுமன்றத்தில் 2 பிரிவுகள் உள்ளது ஒன்று பிரதிநிதிகள் சபை (House of Representatives) மற்றொன்று செனட் சபை (Senate).
அமெரிக்க நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களின் பதவிக் காலம் என்பது வெறும் 2 வருடம் மட்டுமே, ஆனால் செனேட் உறுப்பினர்களின் பதவிக்காலம் என்பது 6 ஆண்டு காலம். இந்த மிட்டேர்ம் தேர்தலில் அனைத்து 435 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நடக்கும்.
அதேபோல் 100 பேர் அடங்கிய செனட் உறுப்பினர்களில் 33-35 செனட் இடங்களுக்கும், 39 மாநிலங்களுக்கான கவர்னர்களுக்கான தேர்தலும் மொத்தமாக நடக்கும். இதில் செனட் சபையில் அந்நாட்டின் அதிபர் தனது கட்சியின் அதிகாரத்தை நிலை நாட்டுவது மிகவும் முக்கியமானது.
பொதுத் தேர்தல் போலவே இந்த தேர்தலில் அமெரிக்கக் குடிமக்கள் அனைவரும் வாக்கு அளிப்பார்கள். இந்த தேர்தல் முடிவுகளில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் எந்த கட்சி ஆதிக்கம் பெறுகிறது என்பதில் தான் அமெரிக்காவில் எந்தொரு சட்டத்தையும், முடிவையும் அதிபரால் எடுக்க முடியும்.


Click it and Unblock the Notifications


