அமெரிக்கா: இந்தியா போன்ற வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவில் பணியாற்ற வேண்டும் எனில் H-1B விசா கட்டாயமாகும். இப்படி இருக்கையில் இந்த விசாவை வழங்கும் தானியங்கி கணினி அமைப்பு முறையை சிலர் ஹேக் செய்ய முயற்சிப்பதாகவும், தவறான தகவல்கள் கொடுத்து முறைகேட்டில் ஈடுபட முயல்வதாகவும் அவ்வப்போது சில புகார்கள் வருவதுண்டு. ஆனால் சமீப காலமாக இந்த புகார்கள் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா.. ஏறத்தாழ உலகின் அனைத்து மக்களும் செல்ல விரும்பும் ஒருநாடு. தொழிலாளர்களுக்கான உரிமைகள் இருக்கிறதோ இல்லையோ ஆனால் சம்பளம் மட்டும் கோடி கோடியாக கொட்டிக்கொடுக்க தயாராக இருக்கும் நாடுதான் அமெரிக்கா. எனவே இங்கு போனால் நன்றாக சம்பாதிக்கலாம் என்கிற கனவுடன் லட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கின்றனர். குறிப்பாக ஆசிய நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு செல்ல வேண்டும் என்று அதிகமானோர் விரும்புகின்றனர்.

ஆனால் அமெரிக்காவில் எல்லோரையும் தங்க வைத்துவிட முடியாது. இங்கு நம்மூரில் வடமாநில தொழிலாளர்களை பார்த்து சிலர் விமர்சிப்பதை போல அமெரிக்காவில் குடியேறும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரை பார்த்து அங்குள்ள அமெரிக்கர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பூர்வகுடி அமெரிக்கர்களுக்கே வேலை இல்லை. இப்படி இருக்கும்போது வெளி நாட்டிலிருந்து எதற்காக தொழிலாளர்களை அழைத்து வர வேண்டும் என்று கேள்வியெழுப்பி வருகின்றனர்.
மட்டுமல்லாது இப்படி வேலைக்காக வருபவர்கள் அமெரிக்காவிலேயே குடியேறிவிடவும் விரும்புகின்றனர். இப்படி குடியேறினால் அமெரிக்க குடிமக்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடும். எனவேதான் H-1B விசா முறை பயன்பாட்டுக்கு வந்தது. அதாவது அமெரிக்காவில் வேலை செய்ய விரும்புவோர் இந்த விசாவை பெற்றுக்கொள்ள வேண்டும். அந்நாட்டில் வேலை இருக்கும் வரை மட்டுமே இந்த விசா செல்லுபடியாகும். வேலை இல்லையெனில் குறிப்பிட்ட நாட்களுக்குள் அமெரிக்காவை விட்டு வெளியேறிவிட வேண்டும். ஆனாலும் தேவைக்கும் அதிகமாக தொடர்ந்து மக்கள் அமெரிக்காவுக்கு வர விண்ணப்பிக்க தொடங்கினர்.
இதனை கட்டுப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் உருவாக்கப்பட்டதுதான் H-1B லாட்டரி முறை. அதாவது ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே H-1B விசாக்கள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்படும். அதாவது இந்த ஆண்டு 85 ஆயிரம் விசாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதைவிட அதிகமாக வெளிநாட்டினர் அமெரிக்காவுக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர். எனவே H-1B லாட்டரி முறையில் விசாக்கள் வழங்கப்படும். இதற்காக ஒரு கணினி அமைப்பு முறை உருவாக்கப்பட்டுள்ளது. இது யாருக்கு என்ன வகையான தேவை இருக்கிறது என்பதை கணக்கிட்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக விசாக்களை வழங்க ஆட்களை தேர்வு செய்யும்.
ஆனால் சமீப காலமாக இந்த கணினி முறையை ஏமாற்றுவதற்காக பல போலியான தகவல்களை வெளிநாட்டினர் கொடுத்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. இது குறித்து அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. மேலும், இந்த முறைகேடுகளை தவிர்க்க H-1B விசா வழங்கும் முறையை மேலும் நவீனப்படுத்த இருப்பதாக அந்நாட்டின் குடியுரிமை அதிகாரிகள் கூறியுள்ளனர். மட்டுமல்லாது விசா கோரி பதிவு செய்பவர்கள் தவறான தகவல்களை பதிவு செய்திருந்தால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் யோசித்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். விசாவுக்காக பலர் போலியான தகவல்களை கொடுத்திருக்கும் சம்பவம் அமெரிக்க அதிகாரிகளை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications