டெல்லி: அமெரிக்க அதிபராக பதவி ஏற்றதிலிருந்தே டொனால்ட் டிரம்ப் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரியை அதிகப்படுத்தி வருகிறார். பல்வேறு நாடுகளும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகபட்ச வரியை விதிக்கின்றன , அதற்கு நிகராக அந்த குறிப்பிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு நாங்கள் வரியை அதிகப்படுத்துவோம் என டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார்.
ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள தகவலின் படி பார்க்கும்போது இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படக்கூடிய குறிப்பிட்ட சில பொருட்களுக்கு 25 சதவீத வரியை அறிவிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள், செமி கண்டக்டர் மற்றும் மருந்து பொருட்கள் ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரியை 25% ஆக உயர்த்தி ஏப்ரல் 2ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்த டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டு இருப்பதாக ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது.
இந்தியாவிலிருந்து மின்னணு சாதனங்கள், மருந்து பொருட்கள் மற்றும் ஆடை, சோலார் பேனல்களுக்கான செல்கள் என பல்வேறு பொருட்களும் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவும் அமெரிக்காவிலிருந்து குறிப்பிட்ட பொருட்களை இறக்குமதி செய்கிறது.

டிரம்ப் நிர்வாகம் மூன்று வழிகளில் இந்த பதிலுக்கு பதில் வரியை நடைமுறைப்படுத்த வாய்ப்புள்ளதாக சர்வதேச தரகு நிறுவனமான கோல்ட் மேன் சச்ஸ் ஆய்வு நடத்தி தகவல் வெளியிட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான வரி நடைமுறையை ஆய்வு செய்து பார்க்கும்போது இந்தியா தான் அதிகபட்ச வரியை விதிக்கிறது என கோல்ட் மேன் சச்ஸ் வெளியீட்டுள்ள தகவல் தெரிவிக்கிறது. அமெரிக்கா இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான வரியை அதிகரித்தால் அது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜிடிபியில் 0.1 முதல் 0.6 சதவீதம் வரை தாக்கத்தை ஏற்படுத்தும் என கணித்துள்ளது. இந்த அமைப்பு கணித்துள்ள மூன்று நடைமுறைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்..
நாடு மட்டத்திலான பரஸ்பர வரி விதிப்பு(country-level reciprocity):
இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் சராசரி வரி வித்தியாசத்தின் அடிப்படையில் வரியை உயர்த்துவது. இது செயல்படுத்த எளிமையானதாக இருக்கும் என தெரிவித்துள்ளது. இந்த முறையில் இந்திய பொருட்கள் மீதான வரி 6.5 சதவீதம் வரை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
பொருட்கள் அடிப்படையிலான வரி விதிப்பு (product-level reciprocity):
இதில் அமெரிக்கா இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு தயாரிப்புக்கும் இந்தியா விதிக்கும் கட்டணத்தை சமன் செய்யும் மதிப்பீடுகளின் படி வரி விதிக்கப்படுமாம். இதனால் இந்திய பொருட்கள் மீதான வரி 11.5 சதவீதம் என அதிகரிக்கும். ஆனால் நீண்ட கால அடிப்படையில் இந்த வரியை நடைமுறைப்படுத்துவது சிக்கலானதாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
வரி அல்லாத மற்ற தடைகள் அடிப்படையில் வரி (Reciprocity including non-tariff barriers ):
நிர்வாக தடைகள் ,இறக்குமதி உரிமங்கள், ஏற்றுமதி மானியங்கள் போன்ற வரி அல்லாத பிற தடைகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு வரி விதிப்பது. இது மிகவும் சிக்கலானது இது மற்ற இரண்டு நடைமுறைகளை விட அதிக வரி விதிப்புக்கு வழி வகுக்கும் என தெரிவித்துள்ளது . இதனை நடைமுறைப்படுத்துவதும் எளிதாக இருக்காது என கூறியுள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications