அமெரிக்காவின் டெக் நிறுவனங்களில் தலைமை பதவி தொடங்கி முக்கிய பொறுப்புகள் வரை இந்தியர்களே இருக்கின்றனர். ஐடி நிறுவன வேலைக்காக ஹெச்1பி விசாவில் அமெரிக்கா செல்லும் இந்தியர்கள் பின்னாளில் கிரீன் கார்டு பெற்று அங்கேயே செட்டிலாகிவிடுகின்றனர்.
அமெரிக்காவில் நிரந்தரமாக வசிக்கவும், சட்டப்பூர்வமாக வேலை செய்யவும் அனுமதிக்கும் அதிகாரப்பூர்வ ஆவணம் தான் கிரீன் கார்டு. வேலைக்காக அமெரிக்கா செல்லும் பெரும்பாலான வெளிநாட்டவர்கள் இதனை பயன்படுத்தி அங்கே குடும்பமாக தங்கிவிடுகின்றனர். கிரீன் கார்டு பெற்றவர்கள் அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கியிருக்கலாம், அமெரிக்காவின் எந்த பகுதியிலும் வசிக்கலாம், எந்த நிறுவனத்திலும் வேலை செய்யலாம், அமெரிக்காவில் கல்வி பயிலலாம் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் பயணம் செய்யலாம்.

இந்நிலையில் கிரீன் கார்டு பெறுவதற்கான விதிகளில் புதிய மாற்றங்களை டிரம்ப் நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. புதிய விதியின்படி, வெளிநாட்டவர்கள் அமெரிக்காவுக்குள் இருந்தபடியே கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியாது, அதற்கு பதிலாக, தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பிச் சென்று அங்கிருந்தே விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கிரீன் கார்டு கனவில் இருக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு இடியை இறக்கியுள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றது முதலே குடியேற்ற விதிகளை கடுமையாக்கி இருக்கிறார். ஹெச்1பி விசா விண்ணப்பங்கள், நேர்காணல் அனைத்துமே கடினமானதாக மாற்றப்பட்டு விட்டன. வெளிநாட்டவர்கள் அமெரிக்கர்களின் வேலைகளை பறிக்கின்றனர், அமெரிக்க நிறுவனங்கள் குறைந்த சம்பளத்தில் வெளிநாட்டவர்களை வேலைக்கு எடுத்து அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பை மறுக்கின்றன என தொடர்ச்சியாக குற்றம்சாட்டப்படும் நிலையில் தான் கிரீன் கார்டு விதிகள் மாற்றப்பட்டுள்ளன.
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பான USCIS வெளியிட்ட புதிய வழிகாட்டுதலின்படி, கிரீன் கார்டுக்கான "அட்ஜஸ்மண்ட் ஸ்டேட்டஸ்" கோருபவர்கள் இனிமேல் அமெரிக்காவில் தங்கியபடி செயல்முறையை மேற்கொள்ள முடியாது. அதற்கு பதிலாக, தங்கள் தாய்நாடுகளிலிருந்தே விண்ணப்பிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு அமெரிக்காவில் கிரீன் கார்டு பெற காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது விண்ணப்ப செயல்முறை நடைபெறும் காலத்தில் அமெரிக்காவில் தங்காமல், தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பிச் சென்று அங்கிருந்தே விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் நிர்வாகம் ஏற்கனவே ஹெச்1பி விசா கிடைப்பதில் கட்டுப்பாடு போட்டுள்ளது. விண்ணப்பம், செய்பவர்களின் சமூக வலைதள பதிவுகள் வரை ஆய்வு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான இந்திய ஐடி ஊழியர்களின் அமெரிக்க வேலை கனவு கலைந்து போயுள்ள நிலையில் அங்கே இருந்து கிரீன் கார்டு பெற முயற்சிப்பவர்களுக்கும் டிரம்ப் நிர்வாகம் ஆப்பு வைத்துள்ளது.
எனவே வெளிநாட்டவர்கள் விசா காலாவதியான பிறகு, கிரீன் கார்டுக்கு விண்ணப்பம் செய்திருப்பதாக கூறி அமெரிக்காவில் தங்க முடியாது. சிலர் நிரந்தர குடியுரிமை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பிறகு சட்டவிரோதமாக மறைந்து வாழும் நிலைகளை தடுக்கவும், கிரீன் கார்டு விண்ணப்பத்தை காரணமாக கூறி அமெரிக்காவில் தங்குவதை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications

