அமெரிக்க நாடாளுமன்றத்தில் செலவின மசோதா ஒப்புதல் பெறாமல் இருந்த காரணத்தால் பல்வேறு துறைகளில் நிதி பற்றாக்குறை ஏற்பட்டு செப்டம்பர் 30 முதல் ஒரு மாத காலம் பல சேவைகள் அதிகாரப்பூர்வமாகவே நிறுத்தப்பட்டிருந்தது. இந்த இடைநிறுத்தம் வெளிநாட்டு ஊழியர்களை அதிகம் நம்பியிருக்கும் தொழில்நுட்பம், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு அமெரிக்க துறை நிறுவனங்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டது.
இந்த நிலையில் அமெரிக்க லேபர் துறை ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு அமெரிக்க நிறுவனங்களுக்கும், வெளிநாட்டு ஊழியர்களுக்கும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வெளிநாட்டு ஊழியர் சான்றளிப்பு அலுவலகம் (OFLC) தற்காலிக மற்றும் நிரந்தர வேலைத் திட்டங்களுக்கான விண்ணப்பங்களை மீண்டும் செயலாக்கத் தொடங்கியுள்ளது என அமெரிக்க லேபர் துறை அறிவித்துள்ளது. இப்போது வெளிநாட்டு ஊழியர் சான்றளிப்பு அலுவலகத்தின் போர்டல் முழுமையாக இயங்குவதால், விண்ணப்பங்கள் விரைவாக நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டு ஊழியர் சான்றளிப்பு அலுவலகத்தின் கீழ் இயங்கும் Foreign Labor Application Gateway (FLAG) போர்டல் மற்றும் SeasonalJobs.dol.gov இணையதளம் மீண்டும் விண்ணப்பங்களை செயலாக்கம் செய்வதற்காக திறக்கப்பட்டுள்ளன. இவ்விரு தளங்களும் செப்டம்பர் 30 முதல் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது இரு தளங்களும் திறக்கப்பட்டு உள்ள காரணத்தால் வெளிநாட்டு ஊழியர்களை பணியில் அமர்த்த திட்டமிடும் அமெரிக்க நிறுவனங்கள் இப்போது புதிய Labor Condition Applications (LCAs) விண்ணப்பங்களை H-1B விசாவிற்காக சமர்ப்பிக்கலாம். மேலும் ஏற்கனவே நிலுவையில் உள்ள விண்ணப்பங்களின் நிலையை கண்காணிக்கலாம்.
இதேபோல் 30 நாட்களுக்கு பின்பு வெளிநாட்டு ஊழியர் சான்றளிப்பு அலுவலகம், இப்போது Program Electronic Review Management (PERM) லேபர் சான்றளிப்புகளையும் செயலாக்கம் செய்ய தொடங்கியுள்ளது. இந்த சான்று கிரீன் கார்டு வழங்குவதற்கான முதல் படியாகும் என்பதால் அமெரிக்காவில் இருக்கும் என்ஆர்ஐ-களுக்கு இந்த அறிவிப்பு மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.
அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை நிரந்தரமாக பணியமர்த்த இந்த சான்று அவசியம். 30 நாட்களுக்கு பின்பு LCA மற்றும் PERM விண்ணப்பங்களை செயலாக்கம் செய்ய துவங்கியிருக்கும் காரணத்தால் H-1B, H-2A, H-2B விசாவில் அமெரிக்காவுக்கு சென்றவர்களுக்கு பயனளிக்கும். இவை அனைத்தும் OFLC நிர்வகிக்கும் பணியாகும்.
அமெரிக்க அரசு விசா வழங்குவதில் தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதித்து வரும் காரணத்தால் அந்நாட்டில் இருக்கும் வெளிநாட்டவர்கள் எந்த காரணத்திற்காகவும், விசா மற்றும் வொர்க் பர்மிட் தொடர்பான பணிகளை காலம் தாழ்த்த கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்.
சமீபத்தில் டிரம்ப் அரசின் ஒப்புதலின் படி அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) வெளிநாட்டு ஊழியர்களின் வேலை அனுமதி ஆவணம் (EAD) ஆட்டோமேட்டிக் முறையில் நீட்டிப்பை நிறுத்தப்படுவதாக அறிவித்தது. இந்த மாற்றம் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்களை பாதித்தது. குறிப்பாக H-1B விசா கொண்ட இந்தியர்களின் மனைவி அல்லது கணவர்களை அதிகம் பாதித்தது. இந்த அறிவிப்பின் படி அக்டோபர் 30 முதல் இந்த விதி அமலுக்கு வந்தது.
H-1B விசா கொண்ட ஊழியர்களின் கணவன்/மனைவி H-4 விசாவில் அமெரிக்காவில் இருக்கலாம். அவர்கள் EAD என்னும் வேலை அனுமதி ஆவணத்தைப் பெற்று அமெரிக்காவில் வேலை செய்ய முடியும். இந்த EAD ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அளிக்கப்படும். இந்த காலக்கெடு காலாவதியாகும் முன் புதுப்பிக்க விண்ணப்பித்தால், தானாக 540 நாட்கள் (18 மாதங்கள்) நீட்டிப்பு கிடைக்கும்.
வெளிநாட்டினரின் EAD விண்ணப்பத்தை ஆய்வு செய்ய USCIS அமைப்புக்கு 6 முதல் 18 மாதங்கள் வரை ஆகும் என்பதால், இந்த ஆட்டோமேட்டிக் நீட்டிப்பு முறை அவர்கள் வேலையை எவ்விதமான தடையுமின்றி தொடர உதவியது. இதனால் ஊழியர்கள் இடையில் வேலை நிறுத்த வேண்டியதில்லை.


Click it and Unblock the Notifications