அமெரிக்க பங்குச்சந்தை நேற்று மிட்டேர்ம் தேர்தல் காரணமாக அதிரடியாக உயர்ந்து முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி பொங்கியது. ஆனால் இன்றைய வர்த்தகம் துவக்கமே பெரும் சரிவுடன் துவங்கியுள்ளது. இன்றைய சரிவுக்கு மொத்த காரணகர்த்தாவாக இருப்பது டெக் மற்றும் ஏஐ பங்குகள் தான்.
அமெரிக்காவில் இன்று வர்த்தகம் துவங்கி வெறும் 40 நிமிடங்களில் அமெரிக்காவின் S&P 500 குறியீட்டின் மொத்த சந்தை மதிப்பு சுமார் 2 டிரில்லியன் டாலர் அளவுக்கு சரிந்து, மொத்த பங்குச்சந்தையை புரட்டிப்போட்டது.

இதன் மூலம் அமெரிக்க மிட்டேர்ம் தேர்தலுக்கு பிறகு சந்தையில் ஏற்பட்ட ஒட்டுமொத்த உயர்வும் சில நிமிடங்களிலேயே காணாமல் போனது. அமெரிக்க பங்குச் சந்தை வரலாற்றிலேயே மிகக் குறுகிய நேரத்தில் ஏற்பட்ட மிக மோசமான சரிவில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இன்றைய வர்த்தகத்தில் நாஸ்டாக் 1300 புள்ளிகள் சரிந்து 5 சதவீத சரிவை பதிவு செய்துள்ளது, இதேபோல் எஸ் அண்ட் பி 500 குறியீடு 260 புள்ளிகளும், டாவ் ஜோன்ஸ் 1224 புள்ளிகளும், VIX குறியீடு எப்போதும் இல்லாமல் 8.74 சதவீதமும் உயர்ந்து அமெரிக்க பங்குச்சந்தையை ஆட்டம் காட்டியுள்ளது.
முக்கிய துறை
அமெரிக்கப் பங்குச்சந்தையின் இன்றைய வர்த்தகத்தில் ஏஐ, டேட்டா சென்டர், கிளவுட் சேவைகள், நியோ கிளவுட், சிப் தயாரிப்பு, சிப் டிசைன் சார்ந்த அனைத்து நிறுவனங்களும் பெரும் சரிவை சந்தித்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் ஜனநாயக கட்சி ஆதிக்கம் செலுத்தும் நிலையில், ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சி மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படும், குறிப்பாக ஏஐ தொழில்நுட்பம் எப்படிப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்து கடுமையான விதிமுறைகள் கொண்டு வரும் என எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
மேலும் ஜனநாயக கட்சி டேட்டா சென்டர் அமைப்பது மூலம் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை முக்கியமாகக் கருத்தும் காரணத்தால் டேட்டா சென்டர் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களும் பெரும் சரிவைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய வர்த்தகத்தில் சிப் தயாரிப்பு நிறுவனமான பிராட்காம், என்விடியா தலா 7 சதவீதமும், குவால்காம் 9 சதவீதமும், டேட்டா சென்டர் கிங்மேக்கரான ஆரக்கிள் 5 சதவீதமும் சரிந்துள்ளது.
டிரம்ப்-ன் குடியரசு கட்சியின் ஆதரவாளரான எலான் மஸ்க்-ன் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் தலா 9 சதவீதம் சரிந்துள்ளது. இதோடு நியோ கிளவுட் சேவை நிறுவனமான Coreweave 12 சதவீதமும், Nebius 17 சதவீதமும், Iren 15 சதவீதமும் சரிந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை
ஜனநாயக கட்சியின் வெற்றி காரணமாக ஈரான் போர் முடிவுக்கு வரும் என கச்சா எண்ணெய் விலை நேற்று 9 சதவீதம் வரையில் சரிந்த நிலையில், இன்று ஈரான் 3 கப்பல் மீது தாக்குதல் நடத்திய காரணத்தால் கச்சா எண்ணெய் விலை 2 சதவீதம் உயர்ந்து பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 97 டாலரில் வர்த்தகமாகி வருகிறது.
தங்கம் விலை
பங்குச்சந்தை சரிவால் மீண்டும் பத்திர முதலீட்டின் மீதான லாபம் அதிகரிக்கும் காரணத்தாலும், டாலர் மதிப்பு உயர்வதாலும் தங்கம் நேற்று பதிவு செய்த 3 சதவீத உயர்வு போல் அல்லாமல் பாதுகாப்பான முதலீட்டைத் தேடும் முதலீட்டாளர்களுக்கு முக்கியமான தேர்வாக மாறியுள்ளது. இதன் மூலம் ஸ்பாட் சந்தையில் வெறும் 1.28 சதவீதம் சரிந்து 4112.63 டாலராக உள்ளது.


Click it and Unblock the Notifications

